/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மோசடி நிதி நிறுவன உரிமையாளர்கள் திருமணத்தில் சிறைபிடித்த மக்கள்
/
மோசடி நிதி நிறுவன உரிமையாளர்கள் திருமணத்தில் சிறைபிடித்த மக்கள்
மோசடி நிதி நிறுவன உரிமையாளர்கள் திருமணத்தில் சிறைபிடித்த மக்கள்
மோசடி நிதி நிறுவன உரிமையாளர்கள் திருமணத்தில் சிறைபிடித்த மக்கள்
ADDED : ஜன 23, 2024 06:07 AM
கோயம்பேடு : சென்னை, நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பிரதான சாலையிலுள்ள மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், மூவரை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளதாக, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், சிறை பிடிக்கப்பட்ட ஜெயலட்சுமி, 47, வேகேஷ் விமல், 20, மற்றும் 4 வயது சிறுமி ஆகியோரை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் வில்லிவாக்கம், பாடி மேம்பாலம் சர்வீஸ் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில்,'குபேரன் செல்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தங்க நகை, நிலம் சேமிப்பு திட்டம் என, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
நிறுவனத்தை ரங்கா ரெட்டி, அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன் ஹேம்நாத், வேகேஷ், சகோதரர்கள் விஷ்ணு ரெட்டி, கோபால் ரெட்டி, கஜலட்சுமி ஆகியோர் சேர்ந்து நடத்தினர்.
வாரம் 250 ரூபாய் வீதம், 300 வாரங்கள் பணம் முதலீடு செய்வோருக்கு, இறுதியில் தங்க நகை மற்றும் நிலம் வழங்குவதாக கவர்ச்சி விளம்பரம் செய்து, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்தனர். இதை நம்பி, பலர் பணம் செலுத்தினர்.
ஆனால், கடந்த டிச., மாதம் பல கோடி ரூபாயுடன், குபேரன் அறக்கட்டளை நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்டோர் இதுகுறித்து, வில்லிவாக்கம் காவல் நிலையம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குபேரன் அறக்கட்டளை ரங்கா ரெட்டியின் மனைவி ஜெயலட்சுமி, 47, மகன் வேகேஷ் விமல், 20, மற்றும் 4 வயது சிறுமியை, பொதுமக்கள் சிறை பிடித்தது தெரிந்தது.
போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சிறை பிடிக்கப்பட்ட மூன்று பேரையும் மீட்டு, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
இதில், சிறுமியை அவரது உறவினரிடம்ஒப்படைத்தனர். மற்ற இருவரையும், வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

