ADDED : ஜூலை 14, 2025 11:49 PM
ஸ்ரீபெரும்புதுார், தனியார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 60 லட்சம் ரூபாய் செலவில், உமையாள்பரனசேரி பூந்தோட்ட ஏரி சீரமைக்கப்பட உள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், வளையக்கரணை ஊராட்சிக்குட்பட்ட உமையாள்பரனசேரி கிராமத்தில் பூந்தோட்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, எக்ஸனோரா தனியார் அமைப்பு மற்றும் ஏசியன் பெயின்ட் தனியார் நிறுவனம் இணைந்து, 60 லட்சம் ரூபாய் செலவில், ஏரியை துார்வாரி புனரமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் புனரமைப்பு பணிகள் துவங்கியது. இதில், வளையக்கரணை ஊராட்சி தலைவர் ராஜன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் பாரி மற்றும் ராதா, நிர்வாகிகள் சீனிவாசன், மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.