/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோமாரி நோய் தடுப்பு பணி துவக்கம் காஞ்சியில் 1.68 லட்சம் தடுப்பூசி இலக்கு
/
கோமாரி நோய் தடுப்பு பணி துவக்கம் காஞ்சியில் 1.68 லட்சம் தடுப்பூசி இலக்கு
கோமாரி நோய் தடுப்பு பணி துவக்கம் காஞ்சியில் 1.68 லட்சம் தடுப்பூசி இலக்கு
கோமாரி நோய் தடுப்பு பணி துவக்கம் காஞ்சியில் 1.68 லட்சம் தடுப்பூசி இலக்கு
ADDED : ஜன 05, 2025 01:13 AM

வாலாஜாபாத்:தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், கடந்த 2021 ஜனவரியில் துவங்கியது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இத்தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு, 2030ம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் முற்றிலுமாக ஒழிப்பது இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
நான்கு மாத வயதுடைய கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட அனைத்து பசு, எருமை மற்றும் காளைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், காது அடையாள வில்லைகள் ஏற்கனவே முந்தைய சுற்றுகளில் போடப்படாத கால்நடைகளுக்கு, மீண்டும் காது வில்லைகள் பொருத்தல் மற்றும் 4 - 5 வயது வரையிலான கன்றுகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி பணிக்காக கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய 44 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், புதுவாழ்வு மற்றும் மகளிர் திட்டத்தினருடன் இணைந்து, கால்நடைகளுக்கு 100 சதவீத தடுப்பூசி பணி மேற்கொள்வதுடன், தடுப்பூசி அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான முதல் சுற்றுக்கு 1.68 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம், மோட்டூர் ஆகிய கிராமங்களில், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி, இந்த ஆண்டுக்கான முகாமை கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி, செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், கால்நடை மண்டல இயக்குனர் பாஸ்கரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் 31ம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும், தொடர்ந்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.