/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு ஊழியர் குடியிருப்பு பொதுமக்களுக்கு...மாற்றம்!:கலெக்டர் ஆபீஸ் அருகே புதிதாக 83 வீடுகள்
/
அரசு ஊழியர் குடியிருப்பு பொதுமக்களுக்கு...மாற்றம்!:கலெக்டர் ஆபீஸ் அருகே புதிதாக 83 வீடுகள்
அரசு ஊழியர் குடியிருப்பு பொதுமக்களுக்கு...மாற்றம்!:கலெக்டர் ஆபீஸ் அருகே புதிதாக 83 வீடுகள்
அரசு ஊழியர் குடியிருப்பு பொதுமக்களுக்கு...மாற்றம்!:கலெக்டர் ஆபீஸ் அருகே புதிதாக 83 வீடுகள்
ADDED : நவ 15, 2024 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டு, 40 ஆண்டுகள் மேலாக பயன்படுத்திய வீடுகள் இடிக்கப்பட்டு, பொதுமக்கள் விற்பனைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்காக, 60 கோடி ரூபாய் மதிப்பில், 12 அடுக்குகள் கொண்ட, 83 வீடுகள் கட்டப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, அரசு ஊழியர்களுக்கான தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில், புதிய குடியிருப்புகள், 1969ம் ஆண்டு கட்டப்பட்டன. இதில் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, தரை தளத்துடன் கூடிய மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட, 230 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டன.
அதேபோல, 1990ம் ஆண்டு, எம், எச் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மூன்று அடுக்குகள் கொண்ட 90 குடியிருப்புகள் மேலும் கட்டப்பட்டன. கலெக்டர் அலுவலகம் அருகில் மொத்தம் 320 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அப்பகுதியில், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உட்பட அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என, பலரும் வாடகைக்கு குடியிருந்தனர்.
இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், வீடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில், அதன் கதவுகள், ஜன்னல்கள் உடைந்த நிலையில், கூரைகள் பெயர்ந்து விழுந்தும் மோசமான நிலையில் காணப்பட்டன.
வீட்டு வசதி வாரியம், வீடுகளை சீரமைக்கவில்லை என, வாடகைக்கு குடியிருந்த அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பெரும்பாலான வீடுகள் பாழடைந்து போனதால், அனைவரையும் காலி செய்ய, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதைத் தொடர்ந்து, படிப்படியாக இந்த வீடுகளில் இருந்து அரசு ஊழியர்கள் காலி செய்தனர். அனைவரும் காலி செய்த நிலையில், இங்குள்ள குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும் என, அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், இந்த குடியிருப்புகளில் ஒரு பகுதியை மட்டும் இடித்து, அங்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான பூர்வாங்க பணியாக, கலெக்டர் அலுவலகம் அருகே, 90 வீடுகள் இடிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த இடத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பில், 12 அடுக்குமாடி கொண்ட, 83 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில், 2 படுக்கை அறை கொண்ட வீடுகளாக, 48 வீடுகளும், 3 படுக்கை அறை கொண்ட வீடுகளாக 35 வீடுகளும் கட்டப்பட உள்ளன.
லிப்ட் வசதியுடன், கான்பரன்ஸ் ரூம், பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு வர வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
அதேசமயம், பாழடைந்து கிடக்கும் பிற குடியிருப்புகளை இடித்து, புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு வசதி வாரியம், புதிதாக 83 வீடுகள் கட்டி விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளன. டெண்டர் பணிகள் நடப்பதால், இன்னும் ஒப்பந்த பணிகள் கூட துவங்கவில்லை. அதையடுத்து, வீடு கட்டும் பணிகள் துவங்கி, 2 ஆண்டுகள் நடக்கும். அதன்பின், இந்த வீடுகளை விற்க திட்டமிட்டு உள்ளோம்.
அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை இடித்து, அவற்றை மீண்டும் கட்டி தருவதற்கான முடிவுகளை அரசு தான் எடுக்க வேண்டும். தற்போது 90 வீடுகளை இடித்து, அதில் 83 வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம். 12 அடுக்குகள் கொண்ட வீடுகளும், தரை தளத்தில் பார்க்கிங் வசதியும் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.