ADDED : ஜூலை 04, 2025 02:25 AM

வாலாஜாபாத்:தமிழ்நாடு தொழிற்பயிற்சி சங்கத்தின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாலாஜாபாதில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பதவி உயர்வு, காலி பணியிடம் நிரப்புதல், பணிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் 5ம் கட்ட நடவடிக்கையாக பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. அதில், இயக்குநரோடு நடந்த பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலையிட்டு, தொழிற்பயிற்சி அலுவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.
கருவூலம் மற்றும் கணக்குத் துறை மாநில பொது செயலர் லெனின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்ட கிளை தலைவர் டில்லிபாபு மற்றும் நிர்வாகிகள் முகமது நசீம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.