/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை முன்னேற்பாடு, உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்
/
பருவமழை முன்னேற்பாடு, உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்
பருவமழை முன்னேற்பாடு, உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்
பருவமழை முன்னேற்பாடு, உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்
ADDED : நவ 23, 2024 08:07 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, 274 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டங்களில், பருவமழை முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து பல்வேறு ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சிகள் தினமான நவ., 1ம் தேதி, அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு நவ.,1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தீபாவளியையொட்டி அரசு பொது விடுமுறை அறிவித்திருந்ததால், அன்றைக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட கிராம சபை கூட்டம், நவ.,23 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுதும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நேற்று நடந்தது.
குன்றத்துார் ஒன்றியம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் ஜமீலா தலைமையில் நடந்தது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுத்தமான குடிநீர் விநியோகம், ஊராட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றி, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது :
அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் ஆகிய பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், 160 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய் வாயிலாக அடையாற்றில் சேருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சியில் 16.6 கோடி செலவில், 114 சாலைகள் மற்றும் 15 இடங்களில் மழைநீர் வடிநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,14.1 லட்சம் மதிப்பில் சுப்பிரமணிய நகரில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
'அய்யப்பன்தாங்கல் பகுதயில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது' என, பெண் ஒருவர் புகார் கூற, ‛நீங்கள் தான் சோறு போடுகிறீர்கள்' என அமைச்சர் பதில் அளித்தார்.
குடிநீர் வசதி குறித்து எழுந்த புகாருக்கு, 'அய்யப்பன்தாங்களில் இன்னும் மூன்று மாதங்களில் குடிநீர் வாரியம் சார்பில், குடிநீர் வழங்கும் திட்டம் வந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, களக்காட்டூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம், ஊராட்சி தலைவி நளினி தலைமையில் நடந்தது. ஊராட்சியில் உள்ள அலுவலங்களுக்கு இணைய தளம் இணைப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் திருடுபோகாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை துார்வாரவும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விஷார் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம், ஊராட்சி தலைவர் கார்த்தி தலைமையில் நடந்தது. திம்மசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மகளிர் சுயஉதவி குழுவினர் கவுரவிக்கப்பட்டனர். புயல் பாதுகாப்பு மையங்களை சுத்தப்படுத்தி, குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வகையில், தயார் நிலையில் வைத்திருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலுார் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- நமது நிருபர் குழு -