/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நிலத்தடி நீர்மட்டம் 1.91 அடி உயர்வு...ஆறுதல்! :கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னைக்கு 'குட்பை';கோடையை சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை
/
காஞ்சியில் நிலத்தடி நீர்மட்டம் 1.91 அடி உயர்வு...ஆறுதல்! :கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னைக்கு 'குட்பை';கோடையை சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை
காஞ்சியில் நிலத்தடி நீர்மட்டம் 1.91 அடி உயர்வு...ஆறுதல்! :கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னைக்கு 'குட்பை';கோடையை சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை
காஞ்சியில் நிலத்தடி நீர்மட்டம் 1.91 அடி உயர்வு...ஆறுதல்! :கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னைக்கு 'குட்பை';கோடையை சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை
ADDED : டிச 07, 2024 08:12 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் 1.91 அடி சராசரியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதமும் தொடர் மழை பெய்தால், மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 2025ல் வரப்போகும் கோடை காலத்தை சமாளிக்க முடியும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், வடக்கு மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்யக்கூடியது. காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இம்மழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
அதன்படி, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத பருவமழை காலத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 51.4 செ.மீ., மழை இயல்பாக பெய்ய வேண்டும். இதில், அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் 45.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
பருவமழைக்கு பெய்ய வேண்டிய மழை அளவில், இப்போதே 89 சதவீதம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, பெஞ்சல் புயல் காரணமாக நவம்பர் இறுதியில் பெய்த கனமழை, நிலத்தடி நீர்மட்டம் உயர கைகொடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மெல்ல உயர துவங்கியிருப்பது, நகரவாசிகள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நீர்வள ஆதாரத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி, 10.5 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம், நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வில், 8.59 அடியாக பதிவாகியுள்ளது.
அதாவது, 1.91 அடி உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அக்டோபர் மாத ஆய்வின்போது, 1.54 அடி நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருந்தது. ஆனால், நவம்பரில் பெய்த தொடர் கனமழை காரணமாக, 1.91 அடி சராசரியாக உயர்ந்திருப்பது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்தின் பல்வேறு நாட்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இயல்பான மழையளவான 51.4 செ.மீ., மழை முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. '
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியற்ற ஆழ்துளை கிணறு அமைத்து, வணிக ரீதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் பல செயல்படுகின்றன. லாரி மற்றும் கேன்கள் வாயிலாக நிலத்தடி நீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
அனுமதியின்றி, விதிமுறைகள் பின்பற்றாமல் இயங்கும் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கண்டும் காணாமல் இருப்பதாலேயே, நிலத்தடி நீர்மட்டம் குறைய முக்கிய காரணமாக அமைகிறது.
அவற்றை தடுக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் முறையான ஆய்வு நடத்தி, அனுமதியற்ற குடிநீர் விற்பனை நிறுவனங்களை கண்டறிய வேண்டும்.
டிசம்பரில் கூடுதலாக பெய்யும் மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடை காலங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வால், குடிநீருக்கு பிரச்னை வராது என, எதிர்பார்க்கப்படுகிறது.