/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரோக்கிய உணவு வீதி திட்டம் டெண்டரோடு முடங்கிய பணிகள்
/
ஆரோக்கிய உணவு வீதி திட்டம் டெண்டரோடு முடங்கிய பணிகள்
ஆரோக்கிய உணவு வீதி திட்டம் டெண்டரோடு முடங்கிய பணிகள்
ஆரோக்கிய உணவு வீதி திட்டம் டெண்டரோடு முடங்கிய பணிகள்
ADDED : பிப் 11, 2025 01:07 AM
மாமல்லபுரம்,
இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிகின்றனர். அத்தகைய சுற்றுலா பகுதிகளில், தரமான உணவை எதிர்பார்க்கின்றனர். தாங்கள் விரும்பும் இந்திய, சர்வதேச உணவு வகைகளை, ஹோட்டல், ரெஸ்டாரென்ட், விடுதிகள் ஆகியவற்றில் சாப்பிடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இந்திய பாரம்பரிய உணவு வகைகளையும் பயணியர் விரும்பி சுவைக்கின்றனர். அந்தந்த மாநில பகுதிகளில், குறிப்பிட்ட பகுதிக்கென பாரம்பரிய உணவு வகைகள் உண்டு.
ஆனால், பயணியருக்கு அளிக்கப்படும் உணவில் தரம், சுகாதாரம், ஆரோக்கியம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சுகாதார உணவு வழங்க கருதி, மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுதும், 100 சுற்றுலா பகுதிகளில், ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தை செயல்படுத்த 2023ல் முடிவெடுத்தது.
தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம், வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சகம் ஆகியவற்றிடம் ஆலோசனை பெறப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக செயல்படுத்த, ஒரு இடத்திற்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் செயல்படுத்த, அதே ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, கடற்கரை கோவில் அருகே, மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் 2.0' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் ஏற்படுத்தப்பட உள்ள பயணியர் அடிப்படை வசதிகள், உணவு வீதி திட்டத்திலும் இடம் பெற்றதால், ஆரோக்கிய உணவு வீதி திட்டத்தை வேறிடத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. பின், இப்பகுதிக்கே மீண்டும் மாற்றப்பட்டது. முதற்கட்ட நிதியாக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகம், கடற்கரை கோவில் அருகில், 24.25 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் கல் சாலை அமைக்க, கடந்தாண்டு ஒப்பந்தம் அளித்தது. ஒப்பந்ததாரர் பணிகளை துவக்க முயன்றபோது, திட்ட பகுதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடம் என தெரிவித்து, அந்நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது.
இத்தகைய நிர்வாக சிக்கல்களால், திட்டத்தை வேறிடம் மாற்ற பரிசீலிக்கப்பட்டது. பின் மீண்டும் இங்கேயே செயல்படுத்த முடிவெடுத்தும், கிடப்பில் உள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
உணவு வீதி, சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்திலும் அமைகிறது. அந்நிர்வாகமோ அனுமதிக்க மறுத்து விட்டது. ஒப்பந்தம் அளித்தும் பணிகளை துவக்க முடியவில்லை. உயரதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

