/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு
/
காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு
காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு
காஞ்சியை புரட்டியெடுத்த கனமழை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் கடும் பாதிப்பு
ADDED : டிச 14, 2024 01:40 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, ஒரே நாளில் 41 ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகின்றன. பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு காட்டிலும், கூடுதலாக 12 சதவீதம் மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பாக, 71 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெய்த கனமழையால், ஒரே நாளில், 41 ஏரிகள் நிரம்பியது நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தால், நிரம்பாத ஏரிகளும் வேகமாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 சதவீதம் நிரம்பியுள்ள 94 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பை அருகே ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து துவங்கும் அடையாறு கிளை கால்வாய், வரதராஜபுரத்தில் ஒன்றாக இணைந்து, சென்னை பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
சோமங்கலம் ஏரி, மணிமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால், அடையாறு கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், வரதராஜபுரத்தில் தாழ்வான பகுதிகளான பி.டி.சி.,நகர், பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், வைதேகி நகர், விஜய் நகர் உள்ளிட்ட பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
விஜய் நகரில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய ஒரு குடும்பத்தினரை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று, நேற்று மீட்டனர். குடியிருப்பை சூழ்ந்த வெள்ள நீரால் அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மணிமங்கலம் ஏரி உள்ளது. 18.5 அடி ஆழம் உடைய இந்த ஏரி, வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, ஏரியின் மூன்று கலங்கள் வழியே உபரி நீர், நேற்று முதல் வெளியேறுகிறது. இந்த ஏரியின் உபரி நீர், அடையாறு கால்வாயில் கலந்து வரதராஜபுரம் பகுதிக்கு செல்வதால், அங்கு தாழ்வான குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து, பல ஏரிகளில் உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டி, கலங்கல் வழியை உபரி நீர் ஆர்ப்பரித்து வெளியேறி வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இந்த உபரி நீர் கால்வாய் முழுமையாக நிரம்பி, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையில் பல இடங்களில் வெள்ளி நீர் சாலையை மூழ்கடித்து கடந்து செல்கிறது.
இதனால், நேற்று காலை, இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- நமது நிருபர் குழு-