தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தார் விலை உயர்வால் சாலைகள் போடும் பணி சுணக்கம்! 'டெண்டர்' எடுத்த ஒப்பந்ததாரர்கள் நழுவல்

தார் விலை உயர்வால் சாலைகள் போடும் பணி சுணக்கம்! 'டெண்டர்' எடுத்த ஒப்பந்ததாரர்கள் நழுவல்

தார் விலை உயர்வால் சாலைகள் போடும் பணி சுணக்கம்! 'டெண்டர்' எடுத்த ஒப்பந்ததாரர்கள் நழுவல்


UPDATED : ஜூலை 19, 2026 10:05 PM

ADDED : ஜூலை 19, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 10:05 PM ADDED : ஜூலை 19, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: தார் விலையேற்றம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட கிராம ஊராட்சிகளில் நடந்து வந்த சாலை சீரமைப்பு பணி சுணக்கம் அடைந்துள்ளது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள ஆர்வம் காட்டாததால், ஜல்லிக்கற்கள் நிரவியதோடு பணி கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் பிரதான சாலைகளை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர். கிராமப்புற சாலைகளை, ஊரக உள்ளாட்சிகளின் நிர்வாகங்கள் பராமரித்து வருகின்றன.

பெரும்பாலான கிராமப்புற சாலைகள், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதனால், ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, கிராமப்புற சாலைகள் சீரமைக்கும் பணி, பல கிராமங்களில் நடந்து வருகிறது.

முதல்வர் சாலைகள் விரிவாக்கம், பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாடு திட்டம், 'நபார்டு' எனும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன், சேதமடைந்த தார் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 2025- - 26ம் நிதி ஆண்டு நபார்டு திட்டத்தில், 13.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 கி.மீ., துாரத்திற்கு 14 சாலைகள் போடுவதற்கு, ஊரக வளர்ச்சி முகமை டெண்டர் விட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்தவர்கள், ஏற்கனவே இருந்த சாலைகளை பெயர்த்தெடுத்து, ஜல்லிக்கற்கள் கொட்டி சமன்படுத்தி உள்ளனார். ஆனால் இதுவரை, தார் ஊற்றி சாலை அமைக்கவில்லை.

குறிப்பாக, வையாவூர் - தர்மநாயகன்பட்டரை சாலை, சிறுவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகள் அமைக்கும் பணி, தார் மற்றும் ஜல்லிக்கற்கள் இன்றி முடங்கியுள்ளது. அதேபோல், நெடுஞ்சாலை துறையில் சாலைகள் அமைக்கும் பணியும், சில இடங்களில் இழுபறியாக உள்ளது.

இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து, நகரங்களில் இருக்கும் அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அத்தியாவசிய பணிக்கு செல்லும் கிராமத்தினர், சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது:

தார் சாலை போடும் பணிக்கு கடந்த ஆண்டு இறுதியில் டெண்டர் விடப்பட்டது. அப்போது ஒரு டன் தார் 50,000 ரூபாய் என இருந்தது. தற்போது, 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், தார் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், தார் சாலை அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தார் விலை ஏற்றத்தால், சாலைகள் போடும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். சில ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்த வேலைகளை முடித்துள்ளனர். சில ஒப்பந்ததாரர்கள் தான் சாலை போடும் பணியில் ஆர்வம் காட்டவில்லை. விரைவில், நிலுவை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us