ADDED : டிச 01, 2024 12:48 AM

வாலாஜாபாத்:பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அப்போது, வாலாஜாபாத் அடுத்த திம்மராஜம்பேட்டை மெயின் சாலையில் வசிக்கும் சாமிநாதன் 50 என்பவரது ஓட்டு வீட்டு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு சாமிநாதன் மற்றும் அவரது மனைவி, 16 வயது மகன் ஆகியோர் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறியதால், அதிர்ஷ்ட வசமாக தப்பினர். அதை தொடர்ந்து, அடுத்தடுத்து வீட்டின் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது. இதில், பீரோ, கட்டில், டீ.வி., உள்ளிட்ட வீட்டின் உபயோகப் பொருட்கள் இடிபாடில் சிக்கி சேதம் அடைந்தது. வாலாஜாபாத் தாசில்தார் மற்றும் அப்பகுதி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று இடிபாடில் சிக்கிய வீட்டை பார்வையிட்டனர்.
புயலுக்கு வேருடன் சாய்ந்த மரங்கள்தீயணைப்பு துறையினர் அகற்றம்
காஞ்சிபுரம்:வங்க கடலில் உருவான ‛பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் நேற்று காலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் தாயாரம்மன் குளக்கரை சாலையோரம் இருந்த 20 ஆண்டு பழமையான காட்டுவா வகை மரம் ஒன்று சாலையில் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல, காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலை, காந்தி நகரில், சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது. இதையடுத்து, தீயணைப்பு, மாநகராட்சி, மின்வாரியத்தினர் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த புளிய மரத்தை வெட்டி அகற்றினர்.
பள்ளத்தில் சிக்கிய பசு மீட்பு
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல், பாரதி தோட்டம் பகுதியில் ஆறு அடி ஆழ பள்ளத்தில் பசு ஒன்று சிக்கி உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டனர் என, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி தெரிவித்தார்.
சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர்
காஞ்சிபுரம்:வங்க கடலில் உருவான, ‛பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை மையம், ‛ரெட் அலர்ட்' விடுத்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது.
இதனால், காஞ்சிபுரம் நகரின் பிரதான முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் வீதி, டி.கே.நம்பி தெரு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, மேற்கு ராஜ வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில், மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
இதில், மழைநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலால் செங்கழுநீரோடை வீதியில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால், இரட்டை மண்டபம் சிக்னல் அருகில், நான்குமுனை சந்திப்பில், மழைநீர் குளம்போல தேங்கியது. இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், கொட்டும் மழையிலும், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கி, மழைநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தினர்.
இதேபோல, நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ரங்கசாமிகுளக்கரை, டி.கே.நம்பி தெருவில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் ஏற்பட்ட அடைப்பை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களும் கொட்டும் மழையில் பணிபுரிந்து அடைப்புகளை நீக்கினர்.