/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராமங்களில் வீடு வாடகை கட்டணம் அதிகரிப்பு இரு மடங்கு புலம்பெயரும் தொழிலாளர்களால் கடும் கிராக்கி
/
கிராமங்களில் வீடு வாடகை கட்டணம் அதிகரிப்பு இரு மடங்கு புலம்பெயரும் தொழிலாளர்களால் கடும் கிராக்கி
கிராமங்களில் வீடு வாடகை கட்டணம் அதிகரிப்பு இரு மடங்கு புலம்பெயரும் தொழிலாளர்களால் கடும் கிராக்கி
கிராமங்களில் வீடு வாடகை கட்டணம் அதிகரிப்பு இரு மடங்கு புலம்பெயரும் தொழிலாளர்களால் கடும் கிராக்கி
ADDED : மே 29, 2025 12:25 AM
குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'சிப்காட்' தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில், வீட்டின் வாடகை கட்டணம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. புலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகளவில் வருவதால், கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், சாமானிய மக்கள் சிரமப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய 'ஐந்து' சிப்காட் தொழிற் பூங்காக்கள் உள்ளன.
இதேபோல் குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் மற்றும் பூந்தமல்லி அருகே திருமழிசை ஆகிய பகுதிகளில், 'சிட்கோ' தொழிற்பேட்டை இயங்குகிறது.
இங்கு பணியாற்ற, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் வந்துள்ளனர். இவர்கள், மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
முன், வெளி இடங்களில் இருந்து ஆண்கள் மட்டும் இங்கு வந்து தங்கி பணியாற்றிய நிலையில், தற்போது பெண் தொழிலாளர்களும், அதிகம் பேர் வந்து தங்கி, தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்களின் வருகையால், சிப்காட் மற்றும் சிட்கோ சுற்றுப்புற பகுதிகளில், வாடகைக்கு வீடு கிடைப்பதில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், கிராம பகுதிகளில் ஒரு படுக்கை வசதியுடைய வீடு 2,000 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 6,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
காலி மனை வைத்திருப்போர், தகர கொட்டகைகளை அமைத்தும், காசு பார்த்து வருகின்றனர்.
வாடகை வீடு அதிகமாக இருப்பதால், வடமாநில தொழிலாளர்கள், இந்த மாதிரி தகர கொட்டகைகளில் தங்குகின்றனர்.
அடிப்படை வசதியில்லாத இந்த தகர கொட்டகையில், நபர் ஒருவருக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை, மாதமாதம் கட்டணம் வாங்கப்படுகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து பணியாற்ற வரும் தொழிலாளர்கள், குடும்பத்துடன் தங்க நேர்வதால், கிராம பகுதிகளில் இரண்டு படுக்கை வசதியுடைய வீடுகளின் விலை இரட்டிப்பாகி உள்ளது.
முன், 5,000 ரூபாயாக இருந்த மாத வாடகை கட்டணம், தற்போது 10,000 முதல் 12,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால், சென்னை புறநகரை ஒட்டியுள்ள குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி தாலுகாக்களில் உள்ள கிராமங்களில், வீடுகளின் கட்டுமானமும் அதிகரித்துள்ளது.
சிரமம்
வாடகை வீட்டின் தேவை அதிகரித்துள்ளதால், வீட்டு உரிமையாளர்கள் வாடகை கட்டணத்தை அடிக்கடி உயர்த்துகின்றனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில், வீட்டு வாடகையும் உயர்வதால், சொந்த வீடு இல்லாத தொழிலாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் 4,000 ரூபாயாக இருந்த வாடகை தற்போது 10,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. வாடகை வீடும் தேடினாலும் எளிதாக கிடைப்பதில்லை.
- என்.பெருமாள், 42,
வெளி மாவட்ட தொழிலாளி,
இருங்காட்டுக்கோட்டை.