/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார் வேலுார் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
/
இளையனார் வேலுார் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 07:29 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த அவளூர் கிராமத்தில் இருந்து, தம்மனுார் கிராமம் வழியாக இளையனார்வேலுார் சென்றடையும் இணைப்பு சாலை உள்ளது.
அவளூர், தம்மனுார், காமராஜபுரம், வள்ளிமேடு, இளையனார் வேலுார் உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இளையனர்வேலுாரில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளதால், அக்கோவிலுக்கு சுற்றுலா பயணியர் இச்சாலை வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில், அவளூர் அடுத்த தம்மனுார் மற்றும் கம்மராஜபுரம் கிராம சாலைகள் மிகவும் குறுகியதாகவும், சில இடங்களில் சிதிலமடைந்தும் உள்ளது.
குறுகிய இச்சாலை பகுதிகளில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இயலாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரத்தில் இருந்து, இளையனார் வேலுார் வரை இயக்கப்படும் தடம் எண்: 86 அரசு பேருந்து, விரைவாக சென்றடைய முடியாத நிலை தொடர்கிறது.
மேலும், இக்கிராம சாலைகளின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளதால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கான டிராக்டர், அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்கள் இயக்குவதிலும் தொடர்ந்து சிக்கல் உள்ளது.
எனவே, அவளூரில் இருந்து, கிராமங்கள் வழியாக இளையனார்வேலுார் செல்லும் இணைப்பு சாலையை அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.