/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முறைகேடான பாதை அமைப்பால் கம்பன் கால்வாய் கரை சேதம்
/
முறைகேடான பாதை அமைப்பால் கம்பன் கால்வாய் கரை சேதம்
முறைகேடான பாதை அமைப்பால் கம்பன் கால்வாய் கரை சேதம்
முறைகேடான பாதை அமைப்பால் கம்பன் கால்வாய் கரை சேதம்
ADDED : ஆக 04, 2025 01:12 AM

காஞ்சிபுரம்:கம்பன் கால்வாய் குறுக்கே, முறைகேடாக பாதை அமைக்கப்பட்டிருப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் வீணாக வெளியேறும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து துவங்கும் கம்பன் கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., துாரம் கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை சென்றடைகிறது.
இந்த கால்வாய் வழியாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலமாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கால்வாயில், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், நெல்வாய், தண்டலம், மேல் பொடவூர் ஆகிய இடங்களில் கால்வாய் கரைகளை ஆங்காங்கே உடைப்பு ஏற்படுத்தி பாதை அமைத்துள்ளனர்.
குறிப்பாக, கூரம் கிராமத்தில், கம்பன் கால்வாய் நடுவே பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இது, மண் எடுப்பதற்கா, விவசாயத்திற்கு இடுப்பொருட்களை எடுத்து செல்வதற்கா புரியவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மழை காலத்தில் கம்பன் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் கிராமம் மற்றும் வயல்வெளிகளில் புகும் அபாயம் உள்ளது.
எனவே, முறைகேடாக கால்வாய் மற்றும் பாதை அமைப்போர் மீது சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கூரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கம்பன் கால்வாய் கரையின் இருபுறமும், மண் அரிப்பால் ஏற்கனவே கரை உயரம் குறைந்து வருகிறது. இதில் சிலர் முறைகேடாக பாதை உருவாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
இதை சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்காவிட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட கால்வாய் பகுதிகளில் ஆய்வு செய்து விட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.