/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிகளில் கலைத் திருவிழா துவக்கம்
/
பள்ளிகளில் கலைத் திருவிழா துவக்கம்
ADDED : நவ 11, 2024 11:42 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில், எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2024- - 25ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார்.
இரு ஆண்டுகளாக, 6 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவ- - மாணவியர் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்று வந்தனர். நடப்பாண்டு முதல் 1 - 5ம் வகுப்பு வரையிலான மாணவ- - மாணவியரும் பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன.
மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் என்ற பட்டமும், மாணவியருக்கு கலையரசி என்ற பட்டமும் வழங்கப்படும்.
கடந்தாண்டு நடைபெற்ற கலை திருவிழா போட்டிகளில், தமிழக பள்ளி அளவில் 45,380 மாணவர்களும், வட்டார அளவில் 11,391 மாணவர்களும் மாவட்ட அளவில், 2,726 மாணவர்களும், மாநில அளவில் 411 மாணவர்களும் பங்குபெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கருவி இசை, கோலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, மற்றும் நடனம் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் முதல் இடமும், பிற வகையான போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று மாணவ- - மாணவியர் சாதனை படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், மாணவ- - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று நடனம், வாய்ப்பாட்டு, குழு நடனம், கருவி இசை போன்ற திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த கலைத் திருவிழாவின் துவக்க விழாவில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மனோகரன், மேயர் மகாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.