/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
/
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 03, 2025 01:15 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் பொருட்களின் தரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முகாம் வாலாஜாபாத்தில் நேற்று நடந்தது.
வாலாஜாபாத் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் வாலாஜாபாத் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, வாலாஜாபாத் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரக்க்ஷனா மற்றும் உணவு பாதுகாப்பு பயிற்சியாளர் முகமது ஷெரிப் ஆகியோர் உணவுப் பொருட்கள் விற்பனை முறைகள் குறித்து பேசினர்.
உணவு வணிகங்களில், ஆரோக்கியமான, தரமான உணவுப் பொருள்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துதல் தவிர்த்தல் வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தி, சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதன் அவசியம் குறித்தும், பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் விற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், உணவு பாதுகாப்பு துறையிடம் முறையாக உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் வணிகர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள், உணவின் தரம், காலாவதி தேதி, தயாரிப்பு தேதி பார்த்து பொருட்களை வாங்க வேண்டும் எனவும், இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில், 100க்கும் மேற்பட்ட வணிகர்கள், உரிமம் பெற விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தும் கொண்டனர்.