/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் ஆர்வம்...குறைந்தது!: மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை
/
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் ஆர்வம்...குறைந்தது!: மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் ஆர்வம்...குறைந்தது!: மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை
ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதில் ஆர்வம்...குறைந்தது!: மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை
ADDED : ஆக 24, 2024 12:24 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 296 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், வெறும் 210 பேர் மட்டுமே மண் எடுக்க விண்ணப்பம் செய்திருப்பது, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. சமீப நாட்களில் பெய்த மழையால், மணல் எடுக்க முடியவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கியவுடன், உரம் கையிருப்பு, காலநிலை அறிக்கை போன்றவை வேளாண் அதிகாரிகளால் வாசிக்கப்பட்டன. மேலும், 'அட்மா' திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்கள் பற்றியும் வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.
கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு நடக்கும் அரசு திட்ட முகாம்கள் பற்றி, போதிய விழிப்புணர்வு இல்லை என, விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு, 'அட்மா' திட்டத்தில், 26 முகாம்கள் மாவட்டம் முழுதும் பரவலாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கூரம் வதியூர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 5 விவசாய பயனாளிகளுக்கு, 2.7 மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், விப்பேடு மற்றும் வளத்தோட்டம் கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக 10 விவசாய பயனாளிகளுக்கு, 8.0 மதிப்பீட்டில் பயிர் கடன்களையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், 3 விவசாய பயனாளிகளுக்கு, விதைப்பு கருவி, மண்புழு உர படுக்கை போன்ற வேளாண் இடுப்பொருட்களும் மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், விவசாயிகளுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயையும் கலெக்டர் கலைச்செல்வி விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது:
டி.ஆர்.ஓ., வெங்கடேஷ்: கோவிந்தவாடி அருகே விரைவுச்சாலை அமைத்ததில், கால்வாயில் தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டதாக, விவசாயிகள் கடந்த கூட்டத்தில் தெரிவித்தீர்கள். இதையடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டது.
அதில், இடம் பெற்ற தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, கால்வாயை உயர்த்தி கட்டி தருவதாக கூறியிருக்கின்றனர்.
அதேபோல், பழையசீவரம் பாலாறு தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அங்கிருந்து அகற்ற, நீர்வளத் துறை கொடுத்த கருத்துரு, கலெக்டர் வாயிலாக அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார்: தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அங்கிருந்து அகற்ற, 3.3 கோடி ரூபாயை, அரசிடம் இருந்து கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் மணல் அகற்றப்படும். அகற்றப்படும் மணல் ஆற்றில் கொட்டி சமமாக நிரவல் செய்யப்படும்.
டி.ஆர்.ஓ., வெங்கடேஷ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறையின் 186 ஏரிகளிலும், ஊரக வளர்ச்சித் துறையின் 110 ஏரிகளிலும் வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், இதுவரை 210 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் 120 உத்திரமேரூர் தாலுகாவில் இருந்து வந்தவை.
கலெக்டர் கலைச்செல்வி: இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏரிகளில் இருந்த வண்டல் மணல் எடுக்க விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் தெரிவிக்கலாம்.
விவசாயிகள்: சமீப நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக, வண்டல் மண் எடுக்க முடியவில்லை. பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இருப்பதால், மணல் எடுப்பதில் சிரமம் உள்ளது.
கனிமவளத் துறை அதிகாரி: நஞ்சை நிலமாக வைத்திருக்கும் விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டர் லோடும், புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிக்கு 30 டிராக்டர் லோடும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
அதேபோல், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, 20 டிராக்டர் லோடு மணல் எடுக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
நேரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் கணக்கீடு செய்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எங்கு நடக்கிறது என்ற விபரங்கள் சரியாக வெளியிடவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியிட்டது போல வெளியிட வேண்டும்.
மாசிலாமணி, மரம் வளர்ப்போர் சங்கம்: காட்டுப்பன்றிகளால் பயிர் சேதமாவது தொடர்கிறது. வனத்துறை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதமும், அலைகழிப்பு செய்கிறது. மருதம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இன்று வரை இழப்பீடு கிடைக்கவில்லை. அதேபோல, பனை மரங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்துவிட்டன. கிராமங்களில் பனை விதைகளை விதைக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டம் நடந்தது.