/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் கிடங்கு இருந்தும் திறந்தவெளியில் வைப்பதால் வீண்
/
தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் கிடங்கு இருந்தும் திறந்தவெளியில் வைப்பதால் வீண்
தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் கிடங்கு இருந்தும் திறந்தவெளியில் வைப்பதால் வீண்
தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் கிடங்கு இருந்தும் திறந்தவெளியில் வைப்பதால் வீண்
ADDED : ஏப் 09, 2025 01:24 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க கூரையுடன், ‛ஷெட்' இருந்தும், திறந்தவெளியில் வைத்திருப்பதால் துருபிடித்து வீணாகி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டங்களின் கீழ் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, அரசு சார்பில் கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக இரும்பு கம்பிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் கட்டப்பட்டுவரும் தொகுப்பு வீடுகளுக்கு தேவையான இரும்பு கம்பி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல் மண் தரையில் இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவக வளாகத்தில், இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க, பல லட்சம் ரூபாய் செலவில், நான்கு மாதத்திற்கு முன் கூரையுடன், ‛ஷெட்' அமைக்கப்பட்டது.
இதை பயன்படுத்தாமல் திறந்தவெளியிலேயே வைக்கப்பட்டுள்ளதால், மழை, வெயிலில் காயந்து, காற்றின் ஈரப்பதம் காரணமாக கம்பிகள் துருப்பிடித்து, நாளடைவில் கம்பிகள் வீணாகும் நிலை உள்ளது.
இதனால், இந்த இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
எனவே, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை, கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

