/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளில் கட்டட, மனைப்பிரிவு அனுமதியில்... 'முறைகேடு: பாஸ்வேர்டு' திருடி வசூல் நடத்துவதாக குற்றச்சாட்டு
/
ஊராட்சிகளில் கட்டட, மனைப்பிரிவு அனுமதியில்... 'முறைகேடு: பாஸ்வேர்டு' திருடி வசூல் நடத்துவதாக குற்றச்சாட்டு
ஊராட்சிகளில் கட்டட, மனைப்பிரிவு அனுமதியில்... 'முறைகேடு: பாஸ்வேர்டு' திருடி வசூல் நடத்துவதாக குற்றச்சாட்டு
ஊராட்சிகளில் கட்டட, மனைப்பிரிவு அனுமதியில்... 'முறைகேடு: பாஸ்வேர்டு' திருடி வசூல் நடத்துவதாக குற்றச்சாட்டு
ADDED : நவ 03, 2025 01:05 AM

காஞ்சிபுரம்: ஊராட்சிகளில் கட்டுமான திட்டம், மனைப்பிரிவு அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, ஊராட்சி செயலர்களின் கடவுச்சொல்லை, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் கணினி மைய ஊழியர்கள் முறைகேடாக பயன்படுத்தி, வசூல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,350 குக்கிராமங்களில், பல லட்சம் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
ஊராட்சிதோறும் குழாய் வரி, வீட்டு வரி, நுாலக வரி, தொழில் வரி உள்ளிட்ட பலவித வரி இனங்களை ஊராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது. வரி இனங்களின் வகைக்கு ஏற்ப, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் ரசீதுகள் வழங்கப் படுகின்றன.
அனைத்து ஊராட்சிகளிலும், 2023 - 24ம் நிதி ஆண்டு முதல், வீட்டு வரி உள்ளிட்ட பல வித வரியினங்களை ஆன்லைன் மூலமாக வசூலிக்க வேண்டும்.
ஊராட்சி வரி இனங்களின் விபரங்களை, https://sdp.nic.in/vptax/ என்ற இணையதளத்தில், ஊராட்சி செயலர்கள் பதிவேற்ற வேண்டும்.
அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதில், தனியார் வீட்டுமனைப் பிரிவினர் வீடு கட்ட அனுமதி மற்றும் தனியார் வீட்டுமனை பிரிவினரின் வீட்டு மனைப்பிரிவு வரன் முறைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த ஆன்லைன் விண்ணப்பம், அந்தந்த ஊராட்சி செயலரின் பரிந்துரையில், தலைவர் பரிசீலனை செய்து அனுமதி வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
சில ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலரின் கடவு சொல்லை பயன்படுத்தி, கட்டட அனுமதி மற்றும் வீட்டுமனையை வரன் முறை செய்து, வசூல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கணினி மைய நிர்வாகிகள் துணை போவதாகவும் கூறப்படுகிறது.
ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள் செய்யும் இந்த தில்லுமுல்லு வேலைகளுக்கு, ஊராட்சி செயலர்கள் சிக்கலில் மாட்டி தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
வீடு கட்டும் அனுமதி, வீட்டுமனை வரன் முறைக்கு, தனியார் மனைப்பிரிவு நிர்வாகத்தினர் ஊராட்சி தலைவரிடம் வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்களும், தனியார் கணினி மைய ஊழியர்கள் மற்றும் உதவி இயக்குநர் அலுவலக ஊழியர்களின் துணையுடன் ஊராட்சி செயலரின்,'பாஸ்வேர்டு' பயன்படுத்தி அனுமதி கொடுத்து விடுகின்றனர்.
வரியினங்கள் வசூலிக்கும்போது, எந்த ஆண்டு அனுமதி தரப்பட்டது என்ற விபரத்தை பதிவேற்றும்போதுதான், ஊராட்சி செயலரின் பாஸ்வேர்டு முறைகேடாக பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது.
அந்த அளவிற்கு நுாதனமான முறையில், ஊராட்சி தலைவர்கள் காரியத்தை சாதித்து வருகின்றனர். அதில் ஏற்படும் சிக்கலுக்கு, ஊராட்சி செயலர் பலிகடாவாக வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சி செயலர்களின் பாஸ்வேர்டு அனைவருக்கும் ரகசியமாகவே வழங்கப்பட்டுள்ளது. இதை, முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை. இருப்பினும், ஆய்வு செய்துவிட்டு, எங்கு முறைகேடு நடக்கிறது பார்த்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

