/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழை நின்று இரண்டு நாளாச்சு! வடியாத தண்ணீரால் கவலை
/
மழை நின்று இரண்டு நாளாச்சு! வடியாத தண்ணீரால் கவலை
ADDED : டிச 14, 2024 11:40 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12,350 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிரின் பரப்பளவு, 1,000 ஏக்கருக்கு குறைவாக உள்ளன.
நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்த நெற்பயிர்களின் பரப்பளவு, 11,350 ஏக்கராக உள்ளன. நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு வேளாண் துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, சாகுபடியை ஊக்குவித்து வருகின்றனர்.
மழைப்பொழிவு நின்று இரு நாட்களாகியும், நெல் வயலில் தேங்கியிருக்கும் தண்ணீர் இன்னும் வடியவில்லை. இதனால், தண்ணீரில் முழ்கிய நாற்றுகள் அழுகும் அபாயம் உள்ளன.
வடகிழக்கு பருவமழை பாதிப்பில், இளம்பயிர்கள் கணக்கில் வராது என, வேளாண் துறையினர் கூறியதாக விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் அதிகாரி கூறியதாவது:
வடகிழக்கு பருவமழைக்கு, 33 சதவீத நிலங்கள் பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம் பயிர்களை இழப்பீட்டில் ஏன் சேர்க்கமாட்டர் என்றால், மழை நீர் வடிந்த பின், மீண்டும் அவை துளிர்த்துவிடும்.
மேலும், அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், அவை மீண்டும் மகசூல் தராது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.