/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஜன்மன்' திட்டத்தில் இருளருக்கு வீடு கட்ட... ரூ.79 கோடி!:நிரந்தர முகவரிக்கு அதிகாரிகள் அச்சாரம்
/
'ஜன்மன்' திட்டத்தில் இருளருக்கு வீடு கட்ட... ரூ.79 கோடி!:நிரந்தர முகவரிக்கு அதிகாரிகள் அச்சாரம்
'ஜன்மன்' திட்டத்தில் இருளருக்கு வீடு கட்ட... ரூ.79 கோடி!:நிரந்தர முகவரிக்கு அதிகாரிகள் அச்சாரம்
'ஜன்மன்' திட்டத்தில் இருளருக்கு வீடு கட்ட... ரூ.79 கோடி!:நிரந்தர முகவரிக்கு அதிகாரிகள் அச்சாரம்
ADDED : மார் 05, 2024 11:52 PM
காஞ்சிபுரம்:குடிசை வீட்டில் வசிக்கும் இருளர் பாதுகாப்பாக வசிப்பதற்காக, மத்திய அரசின், 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வீடு கட்டித் தரப்பட உள்ளது. முதற்கட்டமாக இருளருக்கு, 79 கோடி ரூபாய்க்கு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், 173 ஊராட்சிகளில், 193 குக்கிராமங்களில், இருளர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, சாலை, குடிநீர், வீடுகள் ஆகிய வசதிகள் அறவே இல்லை என, ஊரக வளர்ச்சித் துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதுதவிர, ஒரு சில இருளருக்கு நிரந்தரமான முகவரி மற்றும் வீடு இல்லை.
500 பேருக்கு வீடு இல்லை
இதனால், ஆதார் எண்ணைக் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது போன்றவர்களை, ஊராட்சி செயலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்பு குழுவினர் ஆய்வு செய்து, அவர்களின் சுய விபரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, வீட்டுமனை பட்டா இருந்தும் வீடு இல்லாத இருளர் மற்றும் வீட்டுமனை, வீடுகள் இல்லாத இருளருக்கு, வீடு, சாலை, குடிநீர் ஆகிய பல்வேறு வசதிகளை மத்திய - மாநில அரசு நிதியுதவியுடன், 'ஜன்மன்' திட்டத்தில் செய்து கொடுக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக, வீடு இல்லாத இருளருக்கு, 'ஜன்மான்' திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
அதன்படி, 1.46 லட்சம்ரூபாய் மத்திய அரசு நிதி மற்றும், 3.60 லட்சம் ரூபாய் மாநில நிதி என, இரு நிதிகளும் சேர்த்து, 5 லட்சம் ரூபாய் செலவில், 300 சதுர அடியில் புதிய கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, நேற்று முன்தினம் இருளர் குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு படி, 500க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் இல்லை என, தெரியவந்துள்ளது.
இதில் முதற்கட்டமாக, காஞ்சிபுரத்தில் 47 பேர், உத்திரமேரூர் 33, குன்றத்துார் 31, ஸ்ரீபெரும்புதுார் 23, வாலாஜாபாதில் 23 பேருக்கு என, 157 பேருக்கு வீடு கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சித் துறை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கணக்கெடுப்பு பட்டியலில் இருப்போருக்கு, படிப்படியாக வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
இதன் மூலமாக, அரசு புறம்போக்கு வகை நிலங்களில் குடியிருப்போர் மற்றும் முகவரி இல்லாத நபர்களுக்கும் வீடு கிடைக்கும் என, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுமதி
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், வீடுகள் இல்லாத இருளருக்கு, 'ஜன்மன்' திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக, 157 பயனாளிகளை தேர்வு செய்து, 79 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவர்களுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளன.
ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு அனுமதியின் பேரில், ஆதார் அட்டை எடுத்து, புதிய வங்கி கணக்கு துவக்கிய பின், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

