/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி 'சிப்காட்' தொழிற்சாலைகள் வருமானம்...ரூ.5,247 கோடி!: 5 ஆண்டுகளாக ஏற்றுமதி பொருட்கள் அதிகரிப்பு
/
காஞ்சி 'சிப்காட்' தொழிற்சாலைகள் வருமானம்...ரூ.5,247 கோடி!: 5 ஆண்டுகளாக ஏற்றுமதி பொருட்கள் அதிகரிப்பு
காஞ்சி 'சிப்காட்' தொழிற்சாலைகள் வருமானம்...ரூ.5,247 கோடி!: 5 ஆண்டுகளாக ஏற்றுமதி பொருட்கள் அதிகரிப்பு
காஞ்சி 'சிப்காட்' தொழிற்சாலைகள் வருமானம்...ரூ.5,247 கோடி!: 5 ஆண்டுகளாக ஏற்றுமதி பொருட்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 30, 2024 12:40 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் ஏழு தொழிற்பூங்காக்கள் வாயிலாக, சிப்காட் நிறுவனத்திற்கு, ஐந்து ஆண்டுகளில், 5,247 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. தெரியவந்துள்ளது. 2023ல் மட்டும், 1,589 கோடி ரூபாய் கிடைத்துள்ளதால், அரசு வருவாய் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், பிள்ளைப்பாக்கம், வல்லம் - வடகால், வைப்பூர்- - மாத்துார் (மருத்துவ சாதனங்கள்), வானுார்தி பூங்கா என, ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன.
இவற்றின் கீழ், 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
சிப்காட் நிலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், சிப்காட் நிறுவனத்திற்கு குத்தகை கட்டணம், தண்ணீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம், வைப்பு தொகை என 12 வகையான கட்டணம் செலுத்துகின்றன.
அவ்வாறு செலுத்தப்படும் கட்டணம் வாயிலாக, சிப்காட் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 5,247 கோடி ரூபாய், சிப்காட் நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்துள்ளதாக, சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதாவது, தமிழக சட்டசபையின் பொது நிறுவனங்கள் குழு, காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலைகளில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
அப்போது, சிப்காட் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய், அவை அமைந்துள்ள பரப்பு, கையகப்படுத்திய நிலங்கள் உள்ளிட்ட தகவல்களை கோரியது.
அதற்கு சிப்காட் நிறுவனவம், 2020 - 21ல் 11 ஏக்கர்; 2021 - 22ல் 135 ஏக்கர்; 2022 - 23ல் 43.5 ஏக்கர்; 2023 - 24ல் 78.2 ஏக்கர் என, மொத்தம், 268 ஏக்கர் நிலம், சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், 133 ஏக்கர் பட்டா நிலம், 135 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்.
அதேபோல், சிப்காட் அமைந்துள்ள பரப்பு, தொழிற்சாலைகள் வாயிலாக சிப்காட் நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளில் 5,247 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைகள் வாயிலாக, சிப்காட் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாயில், தொழில் துவங்க வழங்கப்பட்ட மனைகளின் குத்தகைக்காக வழங்கப்பட்ட தொகையே அதிக அளவில் உள்ளது.
கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் சிப்காட் நிறுவனத்திற்கு சராசரியாக 500 கோடி ரூபாய் அளவில் கிடைத்த வருவாய், அடுத்து வந்த ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது.
இதற்கு, மருத்துவ சாதனங்கள் பூங்கா, வானுார்தி பூங்கா போன்ற பூங்காக்களில் ஏராளமான தொழிற்சாலைகள் நிறுவியதன் காரணத்தாலேயே, சிப்காட் நிறுவனத்தில் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சராசரியாக, ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் கிடைக்கும் சிப்காட் நிறுவனம், சிப்காப் அமைந்துள்ள பகுதிகளில், அடிப்படையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொழிலாளர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆண்டுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், தமிழக அளவில், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், போதிய வசதிகள் இல்லாததால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
சிப்காட் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாயை கொண்டு, வாகன நிறுத்துமிடம், சாலை விரிவாக்கம், குடநீர் தொட்டி, தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆனால், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை போன்ற சிப்காட்களில், கனரக வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சாலையோரம் நிறுத்த வேண்டியுள்ளது.
சாலையை அகலபடுத்த வேண்டிய பணிகள் துவங்கப்படவில்லை. தொழிற்பூங்கா சாலைகளில் தெரு விளக்குகள் சரிவர எரியாததால், வழிப்பறி அடிக்கடி நடக்கிறது. தொழிலாளர் உணவகம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

