/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
8 அடியில் ஊற்றெடுப்பதால் காஞ்சி விவசாயிகள்... மகிழ்ச்சி:நிலத்தடி நீர்மட்டம் 3 மாதத்தில் 5.4 அடி உயர்வு
/
8 அடியில் ஊற்றெடுப்பதால் காஞ்சி விவசாயிகள்... மகிழ்ச்சி:நிலத்தடி நீர்மட்டம் 3 மாதத்தில் 5.4 அடி உயர்வு
8 அடியில் ஊற்றெடுப்பதால் காஞ்சி விவசாயிகள்... மகிழ்ச்சி:நிலத்தடி நீர்மட்டம் 3 மாதத்தில் 5.4 அடி உயர்வு
8 அடியில் ஊற்றெடுப்பதால் காஞ்சி விவசாயிகள்... மகிழ்ச்சி:நிலத்தடி நீர்மட்டம் 3 மாதத்தில் 5.4 அடி உயர்வு
ADDED : டிச 21, 2025 04:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 19 சதவீதம் குறைவாக பெய்தபோதும், மூன்று மாதங்களில் 5.4 அடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதும், பல்வேறு கிராமப்புறங்களில் 8 அடியில் தண்ணீர் கிடைப்பதும், விவசாயிகள், நகர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 380 ஏரிகளும் உள்ளன. நுாற்றுக்கணக்கான குட்டை, குளங்கள் உள்ளன. பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகள் பாய்கின்றன.
இவ்வாறு ஏராளமான நீர்நிலைகள் இருந்தும், மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நிலத்தடி நீர் குறைவதும், அக்., - நவம்பரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதும் வழக்கம்.
அதுபோல, நடப்பாண்டிலும் ஆகஸ்ட் மாதம் வரை குறைந்த நிலத்தடி நீர்மட்டம், செப்., - அக்., - நவம்பர் மாதங்களில் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முழுதும் பெய்ததால், பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அக்., மாதம் முதல் தற்போது வரை, 56.6 செ.மீ., மழை இயல்பாக பெய்திருக்க வேண்டும். ஆனால், 19 சதவீதம் குறைவாக, 45.6 செ.மீ., மழை பொழிந்துள்ளது.
இருப்பினும் பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகளிலும், தண்ணீர் இப்போது வரை செல்கிறது.
தொடர் மழை இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம், செப்டம்பரில், 13.4 அடியாகவும், அக்டோபரில், 11.4 அடியாகவும், நவம்பரில், 10.2 அடியாகவும், டிசம்பரில் 8.0 அடியாகவும் பதிவாகி உள்ளது, நீர்வள ஆதாரத்துறை எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தொடர் மழை காரணமாக, மூன்று மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம், 5.4 அடி உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கான பாசனத்திற்கும், குடிநீருக்கும் உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்யாறு, வேகவதி, பாலாறு ஆகிய ஆறுகளை ஒட்டிய கிராமப்புறங்களில், வெறும் 8 அடியிலேயே தண்ணீர் கிடைப்பது, கிராமத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத் போன்ற நகர்ப்புறங்களில், 15 அடியிலேயே தண்ணீர் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சிக்கல் ஏற்படாது காஞ்சிபுரம் மாவட்டம் ஆற்று பாசனத்தை மட்டுமின்றி, ஏரி பாசனத்தையும் நம்பியுள்ளது. மாவட்டம் முழுதும் 381 ஏரிகளில், 126 ஏரிகள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பியுள்ளன; 82 ஏரிகள் 75 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதமும், 69 ஏரிகள் 25 சதவீதமும், 3 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தண்ணீர் இருப்பை கொண்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை 19 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், ஏரிகள் பல குறைவான தண்ணீரை கொண்டிருப்பதால், நவரை பருவத்திற்கு விவசாயிகள் சிரமப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
ஆனால், ஆற்றை ஒட்டிய பகுதிகளில் போர்வெல் வாயிலாக தண்ணீர் பயன்படுத்துவோருக்கு நிலத்தடி நீரால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து சில அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைப்பதால், சிக்கலின்றி பயிரிட முடியும் என, நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, உத்திரமேரூர், வாலாஜாபாத், மாகரல், பெருநகர், காஞ்சிபுரம் நகர்ப்புறம் போன்ற பகுதிகளில் நிலத்தடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதாக கூறுகின்றனர்.
இதனால், வீட்டு பயன்பாடு, வியாபாரத்துக்கும் அடுத்த பருவமழை வரை சிக்கல் ஏற்படாது என்கின்றனர்.

