/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் அவதி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல்
/
காஞ்சியில் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் அவதி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல்
காஞ்சியில் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் அவதி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல்
காஞ்சியில் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் அவதி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல்
ADDED : ஆக 25, 2025 11:32 PM

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாமலும், சுற்றுலா பயணியரும் நெரிசலில் சிக்கியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதர், காமாட்சியம்மன், கைலாசநாதர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், உலக புகழ் பெற்ற காஞ்சி பட்டு சேலையை வாங்கவும் காஞ்சிபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக விடுமுறை, முகூர்த்தம், திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிப்பதால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி உள்ளூரில் வசிக்கும் மக்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கோ, கடைகளுக்கோ வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியின் சாலையின் இருபுறமும் உள்ள பழம், டீ, ஸ்வீட்ஸ், பூக்கடை, உணவகம் உள்ளிட்ட கடையினர், நடைபாதை மட்டுமின்றி சாலையையும் 10 அடிக்கும் மேல் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
சாலையின் அகலம் வெகுவாக குறைந்து விட்டதால், பயணியர் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.
ராஜ வீதிகள் காஞ்சிபுரத்தில் ராஜ வீதிகள் என, அழைக்கப்படும் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை என, நான்கு ராஜ வீதிகளிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை கடைக்காரர்கள் தங்களது கடையை விரிவாக்கம் செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட், ஆடிசன் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சாலையோரம் உள்ள பூக்கடை, பழக்கடைகளால் காலை, மாலையில் பள்ளி, அலுவலக நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
ரயில்வே சாலை வழியாக தான், அரசு தலைமை மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வேண்டும்.
ஆனால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற முக்கிய வாகனங்கள் செல்லக்கூட முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
எதிர்பார்ப்பு காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகில் உள்ள சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட், ஆடிசன்பேட்டை பேருந்து நிறுத்தம், நான்கு ராஜ வீதிகள், காந்தி சாலை, மதுராந்தோட்டம் தெரு, சேக்குபேட்டை கவரை தெரு, சங்கூசாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்புகளை முழுதும் அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.