/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் விமரிசை
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் விமரிசை
ADDED : நவ 20, 2024 11:30 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், 56 ஆண்டுகளுக்குப்பின், கடந்த 2014ம் ஆண்டு முதல், கோவிலில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தம் என, அழைக்கப்படும் கோவில் வளாகத்தில் உள்ள, தெப்பகுளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போற்சவம், தொடர்ந்து மூன்று நாட்கள் விமரிசையாக நடந்து வந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்ததால், நான்கு ஆண்டுகளாக தெப்போற்சவம் நடைபெறவில்லை. பல்வேறு திருப்பணிகள் முடிந்து, கடந்த பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இந்நிலையில், ஏழாம் ஆண்டு தெப்போற்சவம் நேற்று துவங்கியது. இதில், இரவு 7:46 மணிக்கு பல்வேறு மலர்கள் மற்றும் வண்ணமயமான மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர், முதல் நாளான நேற்று ஐந்து முறை தெப்பத்தில் உலா வந்தார்.
இரண்டாம் நாளான இன்று ஏழு முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளான நாளை ஒன்பது முறையும், அம்பிகையுடன் சுவாமி தெப்பத்தில் உலா வருவார்.
தெப்போற்சவத்தையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், மேலாளர் சுரேஷ், கோவில் பணியாளர்கள், கோவில் திருக்குள தெப்போற்சவ டிரஸ்ட் காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் செய்திருந்தனர்.
விழாவில் வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.