/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புதுநகர் முழுமை திட்டம் வெளியிடாமல்... இழுபறி! 18 கிராமங்களுக்கான வளர்ச்சி பணிகள் தாமதம்
/
காஞ்சி புதுநகர் முழுமை திட்டம் வெளியிடாமல்... இழுபறி! 18 கிராமங்களுக்கான வளர்ச்சி பணிகள் தாமதம்
காஞ்சி புதுநகர் முழுமை திட்டம் வெளியிடாமல்... இழுபறி! 18 கிராமங்களுக்கான வளர்ச்சி பணிகள் தாமதம்
காஞ்சி புதுநகர் முழுமை திட்டம் வெளியிடாமல்... இழுபறி! 18 கிராமங்களுக்கான வளர்ச்சி பணிகள் தாமதம்
ADDED : நவ 12, 2025 10:04 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடல் பற்றிய, புதுநகர் வளர்ச்சி திட்டத்தின் முழுமை திட்ட அறிக்கை வெளியிடாமல் இழுபறியாக உள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின், 2022- - 23ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை அறிவிப்புகளில், அமைச்சர் முத்துசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில், திருமழிசை, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஐந்து நகரங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால், புது நகர் வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, புதுநகர் திட்டத்துக்காக, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுடன் சுற்றியுள்ள கிராமங்கள் இணைப்பது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, வீட்டுவசதி துறை தெரிவித்திருந்தது.
அதன்படி, பொதுமக்களிடம் கருத்துக்களும் கேட்கப்பட்டன. இந்த கருத்துகேட்புக்கு பின், புதுநகர் வளர்ச்சி குழும முழுமை திட்டம் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை காஞ்சிபுரம் நகருக்கான புதுநகர் திட்டத்தின் முழுமை திட்டம், இதுவரை வெளியிடப்படவில்லை.
புதுநகர் திட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள 18 கிராமங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு, 62.78 சதுர கி.மீ.,ராக உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏற்கனவே, 36 சதுர கி.மீ.,பரப்பளவில் உள்ளது. மேலும், 62 சதுர கி.மீ., நகர் பகுதியமாக மாறுவதால், 98 சதுர கி.மீ., பகுதிக்கு, நகர்ப்புற வசதிகள் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புது நகர் வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான வழிமுறைகள், விதிகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகருக்கான புதுநகர் திட்டத்தில் அறிவிக்கப்படும் இடங்கள், குடியிருப்பு, தொழில், வணிகம் என அனைத்து பிரிவு நில வகைப்பாடுகளும் இருக்கும் வகையில் திட்டமிடப்படும்.
புதுநகர் திட்டம் வாயிலாக, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, தொழில், வணிகம், பூங்கா என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த திட்டமிடப்படும்.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சியை சுற்றி இணைக்கப்பட உள்ள 18 கிராமங்களிலும், பாதாள சாக்கடை வசதியும், திடக்கழிவு மேலாண்மை முழுமையாக அமலாக்க திட்டமிடப்படும். சிறு, குறு நிறுவனங்களை ஏற்படுத்தவும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் திட்டங்கள், வெள்ள பாதிப்பு தடுப்பு திட்டங்கள் கொண்டுவரப்படும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமாக மாறும்.
இதுபோன்ற திட்டங்களுக்கு அடிப்படையாக, புதுநகர் வளர்ச்சி குழும முழுமை திட்டம் வெளியிடப்பட வேண்டும். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், முழுமை திட்டம் வெளியிடாதது, வளர்ச்சி பணிகளுக்கு பின்னடைவாக உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகர ஊரமைப்பு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'புதுநகர் திட்டத்திற்காக காஞ்சிபுரம் நகர் பற்றிய பல்வேறு தகவல்களை சி.எம்.டி.ஏ., கேட்டது. நாங்கள் அனைத்து விபரங்களையும் அவர்களிடம் கொடுத்துவிட்டோம். முழுமை திட்டத்தை சி.எம்.டி.ஏ., தயாரிக்கிறது. அவர்கள்தான் எப்போது அதை வெளியிடுவார்கள் என, சொல்ல முடியும். நாங்கள் முழுமை திட்டத்தை தயாரிக்கவில்லை' என்றார்.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து இடங்களுக்கான புது நகர் திட்டத்துக்காக கலந்தாலோசகர் நியமனம் நடந்துள்ளது. முழுமை திட்டம் தயாரிப்புக்கான விபரங்கள் தொழில்நுட்ப ரீதியிலான பரிசீலனையில் உள்ளன' என்றனர்.
புதுநகர் திட்டத்தில் காஞ்சிபுரத்துடன் இணையும் 18 கிராமங்கள்: ஏனாத்துார், நல்லுார், பாப்பாங்குழி, வையாவூர், களியனுார், புத்தேரி, மேலம்பி, கிழம்பி சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திருமால்படிதாங்கல், கீழ்கதிர்பூர், திம்மசமுத்திரம், கருப்படித்தட்டடை, அச்சுக்கட்டு, நெட்டேரி, அரப்பஞ்சேரி, சிறுகாவேரிப்பாக்கம்.

