/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமுதாய கூடங்கள் கட்ட காஞ்சி மக்கள் கோரிக்கை
/
சமுதாய கூடங்கள் கட்ட காஞ்சி மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 05, 2025 10:22 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், பிள்ளையார்பாளையம், செவிலிமேடு போன்ற பகுதிகளில், மாநகராட்சி சார்பில் சமுதாய கூடங்கள் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், 50க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் செயல்படுகின்றன.
இந்த தனியார் திருமண மண்டபங்களில் 40,000 ரூபாய் முதல், லட்சக்கணக்கான ரூபாய் வரை வாடகையாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வசூலிக்கின்றனர்.
குறைவான வாடகை கட்டணத்தில், அன்னை அஞ்சுகம், அண்ணா அரங்கம் போன்ற கூடங்கள், மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இருப்பினும், மாநகராட்சி முழுதும் குறைவான கட்டணத்தில், சமுதாய கூடங்கள் இல்லை.
இதனால், குறைந்த வாடகையில் நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோர் சமுதாய கூடங்களை விரும்புகின்றனர்.
குறிப்பாக, செவிலிமேடு, பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில், மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாகவே நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செவிலிமேடு பகுதியில் ஏராளமான தனியார் மண்டபங்கள் முளைத்துள்ளன. இப்பகுதியில், மாநகராட்சி சார்பில், ஒரு சமுதாய கூடம் அமைந்தால், அப்பகுதியினருக்கு வசதியாக உள்ளது.
பிள்ளையார்பாளையம் பகுதி, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் அதிக வாடகை செலுத்துவதில் சிரமப்படுகின்றனர்.
பிள்ளையார்பாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சமுதாய கூடம் கட்டவும், கோரிக்கை எழுந்துள்ளது.