/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருக்குறள் திறனறி போட்டி காஞ்சி மாணவர்கள் வெற்றி
/
திருக்குறள் திறனறி போட்டி காஞ்சி மாணவர்கள் வெற்றி
ADDED : நவ 26, 2024 04:39 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 1999ம் ஆண்டு துவக்கப்பட்ட உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், 25 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவிக்க இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காலை 6:15 மணி முதல், 7:20 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல், 6:10 மணி வரையிலும் இலவச திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், ஞாயிற்றுகிழமை, காஞ்சிபுரம் அரசு.கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில், காலை 10:15 மணி மணி முதல், மதியம் 12:15 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பேரவையில் இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் திருக்குறள் பயிற்சி பெற்றுள்ளனர். இதில், 38 மாணவர்கள், 1,330 குறளையும் மனப்பாடம் செய்துள்ளனர்.
இங்கு திருக்குறள் பயிற்சி பெற்று, 1,330 குறளையும் மனப்பாடம் செய்த காஞ்சிபுரம் கே.வி.கே. மாநகராட்சி பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ரோஹன், காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி தர்ஷிணி ஆகியோர், சமீபத்தில் நடந்த தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் திறனறிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசின் 15,000 ரூபாய் பரிசும், சான்றிதழும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவ- - மாணவியரை திருக்குறள் பேரவை பயிற்றுனர் புலவர் பரமானந்தம், நிறுவனர் மற்றும் பயிற்றுனர் குறள் அமிழ்தன், பயிற்றுனர்கள் குறள் கவுசல்யா, குறள் நாகராஜன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.