/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சம்பள விவகாரத்தில் காஞ்சி நெசவாளர்களுக்கு...பாரபட்சம்!:தீர்வு காண அரசு கமிட்டி அமைக்க வேண்டுகோள்
/
சம்பள விவகாரத்தில் காஞ்சி நெசவாளர்களுக்கு...பாரபட்சம்!:தீர்வு காண அரசு கமிட்டி அமைக்க வேண்டுகோள்
சம்பள விவகாரத்தில் காஞ்சி நெசவாளர்களுக்கு...பாரபட்சம்!:தீர்வு காண அரசு கமிட்டி அமைக்க வேண்டுகோள்
சம்பள விவகாரத்தில் காஞ்சி நெசவாளர்களுக்கு...பாரபட்சம்!:தீர்வு காண அரசு கமிட்டி அமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 29, 2024 01:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் வழங்கப்படும் கூலியை காட்டிலும், தனியார் நெசவாளர்களுக்கு, 20 சதவீதம் வரை குறைவாக கூலி வழங்கப்படுவதால், நெசவாளர்கள் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கூலி வழங்குவதில் நீடிக்கும் இந்த சிக்கல்களை, கமிட்டி அமைத்து அரசு தீர்க்க வேண்டும் என, தனியார் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் எந்த மூலையிலும், சுபநிகழ்ச்சிக்கு பட்டுப்புடவை வாங்க வேண்டுமென்றால், சட்டென்று கவனத்திற்கு வருவது காஞ்சிபுரம் நகரம் தான். இதற்கு காரணம், நேர்த்தியாக பட்டுச் சேலைகள் நெய்யப்படுவதும், பரம்பரை பரம்பரையாக நெசவுத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கைவண்ணம் தான்.
அவர்கள் நெய்யும் பட்டுச் சேலைகள் மின்னுவது போல், அவர்களது வாழ்க்கை மின்னுவதில்லை. இதற்கு தொழில் நலிவு, போலி பட்டு சேலைகள் என, பல உதாரணங்கள் கூறினாலும், கூலி விவகாரத்தில், நெசவாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில், 30,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 4,000 நெசவாளர்கள் மட்டுமே தற்போது நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தனியார் உற்பத்தியாளர்களிடம், 4,400 நெசவாளர்கள் நெசவு பணியில் ஈடுபடுவதாக, கைத்தறி துறையினர் தெரிவிக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு, ஆண்டுதோறும் கைத்தறி துறையினர், அடிப்படை கூலியில், 10 சதவீதமாவது உயர்த்தி வழங்குகின்றனர்.
ஆனால், தனியார் நெசவாளர்களுக்கு இதுபோன்ற கூலி உயர்வு நிர்ணயிக்கப்படுவதில்லை. உற்பத்தியாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கூலி விகிதாச்சாரம் மாறுபடுகிறது.
பட்டு சேலையின் ரகம், அதிலுள்ள வேலைப்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூலியை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இஷ்டத்திற்கு கூலியை நிர்ணயம் செய்வதால், தனியார் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கூலியே குறைவாக உள்ளதாக நெசவாளர்கள் கூறி வரும் நிலையில், அதிலிருந்து 20 சதவீதம் குறைவாகவே தனியாரிடம் கூலி வழங்கப்படுகிறது. கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் வழங்கும் கூலிக்கு நிகராக, தனியார் உற்பத்தியாளர்களும் வழங்க வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் நெசவாளர்கள் கூறியதாவது:
நாள்தோறும் விலைவாசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவை உயர்வால், குடும்பத்தை நடத்த முடியவில்லை. கைத்தறி சங்கங்களில் வழங்கப்படும் கூலியை கணக்கிட்டு, தனியார் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இரண்டும் ஒரே அளவாக இருக்க வேண்டும். ஒரு பட்டுச் சேலையை நெய்வதற்கு, இரண்டு அல்லது மூன்று பேரின் உடலுழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான கூலி கிடைப்பதில்லை. தனியார் நெசவாளர்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் மோசமாகி வருகிறது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், பெயின்டிங், சமையல், கூலி வேலை போன்றவைக்கு மாறிவிட்டனர். மீதமுள்ள சில ஆயிரம் நெசவாளர்களும் பணி மாறி செல்லாமல் இருக்க, முறையான கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.