/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 160 பணியிடங்கள்...பற்றாக்குறை!: மருத்துவர்களும் குறைவாக இருப்பதால் சிகிச்சைக்கு சிக்கல்
/
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 160 பணியிடங்கள்...பற்றாக்குறை!: மருத்துவர்களும் குறைவாக இருப்பதால் சிகிச்சைக்கு சிக்கல்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 160 பணியிடங்கள்...பற்றாக்குறை!: மருத்துவர்களும் குறைவாக இருப்பதால் சிகிச்சைக்கு சிக்கல்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 160 பணியிடங்கள்...பற்றாக்குறை!: மருத்துவர்களும் குறைவாக இருப்பதால் சிகிச்சைக்கு சிக்கல்
ADDED : ஜன 05, 2025 01:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத்துறை அனுமதித்த 450 பணியிடங்களில், 160 பணியிடங்கள் காலியாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களில், 12 மருத்துவர் பணியிடங்களும் காலியாக இருப்பதால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே ரோட்டில் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக துவக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்வேறு கால கட்டத்தில், புதிய வசதிகள் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக, 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிலையில், இன்னமும் முழுமையான சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், பிரசவம், புறநோயாளிகள் சிகிச்சை என, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை முதன்மை வகிப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இங்குள்ள காலி பணியிடங்களால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுகிறது. இம்மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், தொழில்நுட்ப உதவியாளர்கள், மருந்தாளர்கள் என, 63 வகையான பணியிடங்கள் உள்ளன.
மொத்தம், 450 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், 290 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 160 பணியிடங்கள் காலியாக இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
இதில், மூத்த மருத்துவர்கள் ஐந்து பேர், உதவி மருத்துவர்கள் ஏழு பேர் என, 12 மருத்துவர் பணியிடங்களும் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருந்தாளர்கள், ஓட்டுனர்கள், இ.சி.ஜி., தொழில்நுட்பவியலாளர் என, 39 வகையான பணியிடங்களில், முழுமையாக பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
அதிகபட்சமாக, செவிலியர் உதவியாளர் 24 பேர், மருத்துவமனை அலுவலர்கள் 39 பேர், சுகாதார அலுவலர்கள் 25 பேர், அறுவை அரங்கு உதவியாளர்கள் ஐந்து பேர் என, மொத்தம் 160 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என, நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க, 10 நாட்கள் நாட்கள் வரை ஆவதாக நோயாளிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். சிறுநீரகம், சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.
இதயத்திற்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது போல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கும் தனி மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.
கடந்த 2021ல், தி.மு.க.,வின் மாவட்ட அளவிலான தேர்தல் வாக்குறுதியில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், தற்போது வரை போதிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையே உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை மட்டுமல்லாமல், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் உள்ளது.
இம்மருத்துவமனையில், தினமும் 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 750 படுக்கை வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையாக இருப்பதால், காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சரிசெய்து, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.