/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவாக்கத்திற்கு கடந்த ஆண்டைவிட நிதி... குறைவு:காஞ்சிபுரம் சமூக ஆர்வலர்கள் வேதனை
/
சாலை விரிவாக்கத்திற்கு கடந்த ஆண்டைவிட நிதி... குறைவு:காஞ்சிபுரம் சமூக ஆர்வலர்கள் வேதனை
சாலை விரிவாக்கத்திற்கு கடந்த ஆண்டைவிட நிதி... குறைவு:காஞ்சிபுரம் சமூக ஆர்வலர்கள் வேதனை
சாலை விரிவாக்கத்திற்கு கடந்த ஆண்டைவிட நிதி... குறைவு:காஞ்சிபுரம் சமூக ஆர்வலர்கள் வேதனை
ADDED : ஆக 20, 2025 10:27 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விரிவாக்க
பணிகளுக்கு, கடந்த ஆண்டு 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில், 76
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 14 கோடி ரூபாய் குறைவாக உள்ளதால் சாலை
விரிவாக்கப் பணிகள் தரமாக நடக்குமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை கோட்ட நிர்வாகத்தின்
கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய
மூன்று உதவி கோட்டங்கள் செயல்படுகின்றன.
அதிருப்தி இந்த மூன்று
உதவி கோட்ட நெடுஞ்சாலை துறை நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில், 1,151 கி.மீ.,
நெடுஞ்சாலை துறை கட்டப்பாட்டு சாலைகள் உள்ளன.
இந்த சாலைகள்
வழியாக, டூ-வீலர், மூன்று சக்கர வாகனம், கார், டிப்பர் லாரிகள் மற்றும்
பேருந்துகள் ஆகிய வாகனங்கள் செல்கின்றன. வாகன வரி கட்டணத்தின் மூலமாக,
அரசிற்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
இந்த நிதியை
பயன்படுத்தி, நெடுஞ்சாலை துறையினர் சாலை பராமரிக்கவும், புதிய சாலை
போடுவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்து, பல வித வளர்ச்சி பணிகளை செய்து
வருகின்றனர்.
கடந்த, 2023-24ம் ஆண்டு 91 கோடி ரூபாய் செலவில், 30 சாலைகளில் இருக்கும், 125 கி.மீ., சாலை போடும் பணிகள் செய்து முடித்தனர்.
நடப்பு நிதி ஆண்டிற்கு, 76.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதில், 36 சாலைகள் சீரமைப்பு பணிக்கு, 55 கி.மீ.,
சாலைகள் சீரமைப்பு மற்றும் பிரதான சாலைகளில் விரிவுபடுத்தும் பணிக்கு
செய்யப்பட உள்ளது.
இது கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த நிதியை காட்டிலும், நடப்பாண்டு ஒதுக்கீடு செய்த 14 கோடி ரூபாய் நிதி குறைவாக உள்ளது.
தற்போது, சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப சாலைகள் விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம்
நெடுஞ்சாலை துறைக்கு உள்ளது.
இருப்பினும், யானை பசிக்கு
சோளப்பொறி போல, அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் விரிவுபடுத்த வேண்டி சாலைகள்
எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, அரசு குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும்
விரிவுபடுத்தும் சாலைகளின் எண்ணிக்கை குறைவாக எடுத்திருப்பது வாகன ஓட்டிகள்
இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வு இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாலைகள் விரிவு மற்றும் புதிய சாலை போடுவதற்கு, 76.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதில், 55 கி.மீ., சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டு
காட்டிலும் நிதி குறைவு தான். தேவைக்கு ஏற்ப பணிகளை தேர்வு செய்து நிதி
பெறப்பட்டுள்ளது. பிற திட்டங்களில் சாலைகள் சேர்ப்பதால், எண்ணிக்கை
குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உயர்மட்ட பாலம்
காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் வழியிலும், வந்தவாசி
செல்லும் வழியிலும், பாலாறு பாய்கிறது. இந்த இரு முக்கிய சாலைகளின்
குறுக்கே, ஓரிக்கை மற்றும் செவிலிமேடு ஆகிய இரு இடங்களில், 25 ஆண்டுகளுக்கு
முன்பாக, தரைப்பாலம் மட்டுமே இருந்த நிலையில், 1997-98ம் ஆண்டுகளில், இரு
சாலைகளின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலங்களை நெடுஞ்சாலைத் துறை கட்டியது.
இதில், வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு வழித்தடத்தில் செல்லும்
செவிலிமேடு பாலாறு பாலம் மிகவும் மோசமடைந்தது. பல முறை நெடுஞ்சாலை துறை
இந்த பாலத்தை சீரமைத்தும் பலனில்லை.
இதனால், செவிலிமேடு பாலாறு
பாலத்திற்கு மாற்றாக, அருகிலேயே புதிதாக ஒரு உயர்மட்ட பாலத்தை கட்ட
நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள பாலாறு பாலம் அருகிலேயே புதி தாக, பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் கடந்தாண்டு துவக்கினர்.
மாநில நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பொறியாளர் செல்வ குமார், கோட்ட
பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ உள்ளிட்டோர் கடந்தாண்டு
பாலாற்றில் ஆய்வு செய்தனர்.
அரசாணை அதைத்தொடர்ந்து, மண்
பரிசோதனையும் பாலாற்றின் பல்வேறு இடங்களில் நடந்தன. இந்நிலையில்,
பாலாற்றில் புதிதாக பாலம் கட்ட, 60 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு
செய்து, அரசாணை பிறப்பித்து உள்ளது.
நெடுஞ்சாலை துறையின் திட்டம் பிரிவு, இந்த புதிய பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
புதிதாக அமைக்கப்பட உள்ள பாலம், 900 மீட்டர் நீளமும், 10.5 மீட்டர்
அகலமும் கொண்டதாக அமைய உள்ளது. பாலத்தின் இரு புறத்தில் நடைபாதையும்,
பக்கவாட்டு தடுப்பு சுவர்களும் அமைக்கப்படும்.
புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில் துவங்கும் பாலம் செவிலிமேடு புறவழிச்சாலை அருகே முடியும் வகையில் கட்டப்படவுள்ளது.
பாலாற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும்,
பலவீனம் அடையாத வகையில் பாலம் கட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தில் மரண பள்ளங்கள்
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் உள்ளது.
பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் வழியாக பேருந்து, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயங்கி வந்தன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமுக்கூடல் அடுத்த மதுார், சிறுதாமூர், சிறுமையிலுார், பழவேரி, பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் துவக்கப்பட்டன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக தொடர்ந்து இயங்குகிறது. இதனால், இந்த பாலம் அடிக்கடி பழுதடைவதும் நெடுஞ்சாலைத்துறையினர் சீர் செய்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், தற்போது பாலத்தின் பல பகுதி களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபடுகின்றனர்.
இந்த பாலம் மீது மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, விபத்து அபாயம் தவிர்க்கும் பொருட்டு முன் எச்சரிக்கையாக பழையசீவரம் பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.