/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் முடக்கம் அரசு வீடு கட்டுவோருக்கும் பணம் கிடைப்பதில் சிக்கல்
/
காஞ்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் முடக்கம் அரசு வீடு கட்டுவோருக்கும் பணம் கிடைப்பதில் சிக்கல்
காஞ்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் முடக்கம் அரசு வீடு கட்டுவோருக்கும் பணம் கிடைப்பதில் சிக்கல்
காஞ்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம் முடக்கம் அரசு வீடு கட்டுவோருக்கும் பணம் கிடைப்பதில் சிக்கல்
ADDED : மே 05, 2025 12:38 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டம், சாலைகள், மழைநீர் கால்வாய், புதிய குளம் வெட்டும் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
இதுதவிர, ஊரக பகுதிகளில் இருக்கும் வீடுகளில், தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் திட்டத்தை, துாய்மை பாரத இயக்கத்தின் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது.
'ஆன்லைன்' விண்ணப்பம்
அதன்படி, 2022- - 23ம் நிதி ஆண்டில், 7,152 தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு அனுமதி அளித்தனர். அதேபோல, 115 இடங்களில் சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 98 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன.
அதேபோல, 2024- - 25ம் நிதி ஆண்டில் 4,273 நபர்களுக்கு தனி நபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்தனர். இதில், 1,572 வீடுகளில் தனி நபர் இல்லக்கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
மீதி, 2,701 வீடுகளில் தனி நபர் கழிப்பறை கட்டவில்லை. உத்திரமேரூர் ஒன்றியத்தில், இரண்டு சமுதாய சுகாதார வளாகம் கட்ட ஒதுக்கீடு செய்தனர்.
அதேபோல், மாவட்டம் முழுதும் 45 சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகம் ஆகியவை கட்டுவதற்கு அனுமதி அளித்தனர். அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.
இதுதவிர, திடக்கழிவு மேலாண் திட்டத்தில், 24 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம், 54 பேட்டரிவாகனங்கள், ஏழு பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் மையம் ஆகியவை ஏற்படுத்த அனுமதி வழங்கி உள்ளனர்.
இதில் தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டத்தில், முறையான வழி காட்டியை கடைப்பிடிக்காமல், தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதனால், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் திட்டத்தில், ஆதார், வங்கி கணக்கு எண் புத்தகம் ஆகிய புதிய ஆவணங்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கனவு இல்ல திட்டத்தில்,புதிய பயனாளிகளின் பெயர்களை பதிவு செய்யும் போது, சில பயனாளிகளின் ஆதார் எண் ஏற்கனவே பதிவாகி உள்ளது என, 'ஆன்லைன்' விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம்முழுதும், 50 சதவீத கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மேலாக, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடிவில்லை.
அதன்படி, கனவு இல்ல திட்டத்தில் கழிப்பறை கட்டும், 1,350 நபர்களுக்கு 12,000 ரூபாய் வீதம், 16.20 கோடி ரூபாய் பணம் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சி துறையினர் முறையான வழி காட்டுதலின் படி சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணி ஆணை மற்றும் அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு பணம் கிடைக்கும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு பதிலாக, கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு கழிப்பறை கட்ட அனுமதி வழங்குகிறோம். அதுவும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட விண்ணப்பித்தாலும் கழிப்பறை கட்ட அனுமதி வழங்கப்படும். மேலும், கனவு இல்லத்தில் விடுபட்டவர்களின் ஆதார் எண்ணுக்கு பதிலாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

