/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடவோலை கல்வெட்டுகள் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வம்
/
குடவோலை கல்வெட்டுகள் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வம்
ADDED : அக் 21, 2024 02:11 AM

உத்திரமேரூர்:குடவோலை கல்வெட்டுகள் குறித்து அறிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்கள் உத்திரமேரூக்கு ஆர்வத்துடன் வந்தனர். இதில், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய செயலரும், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியருமான முனைவர் ரமேஷ் தலைமையில் வருகை தந்த இக்குழுவினர், உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் மற்றும் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில்களை பார்வையிட்டனர்.
தேர்தலுக்கு முன்னோடி
தொடர்ந்து, உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலில், முதலாம் பராந்தகச் சோழர் காலத்து குடவோலை முறை கல்வெட்டுகளை பார்வையிட்டு, கல்வெட்டுக் குறிப்புகளை படித்து வியந்தனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:
குடவோலை நகரமாக அழைக்கப்படும் உத்திரமேரூர், உலக அளவில் புகழ்பெற்றதாக உள்ளது.
1,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயக முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதைய உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னோடியாக இந்த குடவோலை தேர்தல் முறை இருந்து வருகிறது.
அரிய தகவல்கள்
இங்குள்ள கல்வெட்டுகளில், தேர்தலில் போட்டியிட வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள், அவர்களுக்கான செயல்பாடுகள் மற்றும் வேட்பாளரின் தகுதியின்மைகள் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இதை விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தினர் பார்வையிட்டனர்.
மேலும், பல்லவர்களால் கட்டப்பட்ட சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற அவர்கள், அக்கோவிலின் அஷ்டாங்க விமானம் உள்ளிட்ட பல்வேறு கட்டடக்கலை சிறப்புகளை கண்டறிந்தனர்.
கோவிலில் உள்ள ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் மற்றும் விஜயநகர பேரரசன் கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டுகளை படித்து தகவல்கள் அறிந்தனர்.
குறிப்பாக 1038ம் ஆண்டில், ராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் ஊர் சபை மூலம், நிலம் அளித்து அந்த நிலத்தின் வருவாய் கொண்டு நாள்தோறும் இரண்டு முறை இக்கோவிலில் மூலவர் முன்பு தமிழில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்த வரலாற்று செய்தியையும் இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இது போன்ற மரபு நடைகள் வரவேற்கப்பட வேண்டியது,
இவ்வாறு அவர் கூறினார்.

