/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருஊரக பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
/
திருஊரக பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 12:39 AM

குன்றத்துார், குன்றத்துாரில், பழமைவாய்ந்த திருவிருந்தவல்லி தாயார் சமேத திருஊரக பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில், பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டுவருகின்றனர்.
பழமையான இந்த கோவிலின் ராஜகோபுரம், பெருமாள், தாயார், ராமர், ஆண்டாள், கருடன், துவாரபாலகர், ஆழ்வார், ஆச்சாரியர், ஆஞ்சநேயர், விமானம், கொடிமரம் ஆகியவை, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த, 1ம் தேதி துவங்கியது. பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நேற்று, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, வேத பிரபந்த சாற்றுமுறை, தீர்த்த பிரசாத வினியோகம் மற்றும் பொது தரிசனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 9:30 மணிக்கு, சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழாவில், சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் குன்றத்துார், அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதாகார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.