/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொலை செய்ய திட்டமிட்ட மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
/
கொலை செய்ய திட்டமிட்ட மூன்று பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 01, 2024 12:33 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி தலைவர் குமுதா, இவரது மகன் ஆல்பர்ட், 30. தி.மு.க., பிரமுகர், தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு ஆக., 5ம் தேதி, எச்சூர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தொழில் போட்டி காரணமாக கூலிப்படை வாயிலாக ஆல்பர்டை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி சுரேஷ் ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆல்பர்டின் தந்தை டோம்னிக், கார் ஓட்டுனர் தேவன், 28, ஆகியோர் கூலிப்படைக்கு பணம் கொடுத்து மகனை கொலை செய்த சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து டோம்னிக், தேவன், 28, சூர்யா, 24, நவீன்குமார், 31, கூலிப்படையைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட எட்டு பேரை, சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம்பரிந்துரையின்படி, தேவன், சூர்யா, நவீன்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவினை புழல் சிறை துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கி சிறையில் அடைத்தனர்.

