/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியில் சிறுவர்கள் ஈடுபட்டதாக புகார் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை
/
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியில் சிறுவர்கள் ஈடுபட்டதாக புகார் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியில் சிறுவர்கள் ஈடுபட்டதாக புகார் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியில் சிறுவர்கள் ஈடுபட்டதாக புகார் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூலை 09, 2025 01:54 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியில், சிறுவர்கள் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் நேற்று விசாரணை செய்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
பொதுநல நிதி
இதையடுத்து தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து, 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் 28ல் முதற்கட்ட பாலாலயம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 28.48 கோடி ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் அலுவலகம், அன்னதானகூடம், குளியல் அறை கட்டுமானம் என, உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாவது பாலாலயம் கடந்த ஆண்டு பிப்., 11ம் தேதியும், மூன்றாவது பாலாலயம் கடந்த பிப்., 10ம் தேதி நடந்தது. தற்போது மூலவர் சன்னிதி திருப்பணிக்கான நான்காவது பாலாலயம் ஜூன் 6ம் தேதி நடந்தது.
தொடர்ந்து மூலவர் சன்னிதிக்கான திருப்பணி நடந்து வருகிறது.
திருப்பணியை காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஸ்தபதி நிகேஷ் என்பவர் செய்து வருகிறார். இந்நிலையில், கோவில் திருப்பணியில் 14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை வைத்து ஆபத்தான வேலை வாங்குவதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகியோர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் காஞ்சிபுரம் கலெக்டரிடம் நேற்றுமுன்தினம் புகார் மனு அளித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் கமலகண்ணன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் நேற்று, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணி நடக்குமிடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணைக்குப் பின், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் கமலகண்ணன் கூறியதாவது:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த புகாரின்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணி நடக்கும் இடத்தில் ஆய்வு செய்தோம். இங்கு குழந்தை தொழிலாளர் எவரும் பணியில் இல்லை.
அறிவுறுத்தல்
அரசு விதிகளின்படி, ரூப் ஒர்க் உயரமான கட்டடத்தில் பணிபுரிவது, கட்டடத்தை இடிக்கும் பணி, தண்ணீர்மேல் பணிபுரிவது, மிகவும் குறுகலான இடத்தில் 14 வயதிற்கு உட்பட்டோர் யாரும் பணிபுரியகூடாது.
இங்கு பணியில் உள்ள ஒருவர், வளர் இளம் பருவத்தினர். அவருக்கு 16 வயதிற்கு மேல் ஆகிறது. இவர் ஆபத்தான பணியில் எதிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்தோம்.
இவர் 14 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருப்போம். இருப்பினும் பாதுகாப்பு கருதி அவர் தொடர்ந்து பணிபுரியகூடாது என, ஒப்பந்ததாரருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.