/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் நிரம்பாத ஏரிகள்: விவசாயிகள் கவலை
/
உத்திரமேரூரில் நிரம்பாத ஏரிகள்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 23, 2025 05:31 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாத நிலையில், சம்பா பட்ட சாகுபடி பாசனம் கிடைக்குமா என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பிய ஒன்றியமாக உத்திரமேரூர் விளங்குகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் நீர்வளத்தறை கட்டுப்பாட்டின் கீழ் 96 ஏரிகளும், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டின் கீழ், 109 ஏரிகள் என மொத்தம் 205 ஏரிகள் உள்ளன.
ஒன்றியத்தில் உள்ள விவசாய நிலங்களில் 60 சதவீதம், ஏரி பாசனம் வாயிலாக சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழைக்காலத்தில் ஏரிகள் முழுமையாக நிரம்பினால் தண்ணீரைக் கொண்டு சம்பா மற்றும் நவரை பட்டம் என இருபோகத்திற்கு பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த தென் மேற்கு பருவ மழைக்கு, இப்பகுதி ஏரிகளில் குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் சேகரமானது.
இதனால், வடகிழக்கு பருவ மழைக்கு விரைவாக ஏரிகள் நிரம்பும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும், வட கிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் ஏரிகளில் குறைவான தண்ணீரே சேகரமானது.
இந்த ஆண்டுக்கான பருவ மழைக்கு நீர்வளத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள 96 ஏரிகளில், 16 ஏரிகளில் மட்டுமே அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
23 ஏரிகள் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. 34 ஏரிகள் 50 சதவீதமும், 23 ஏரிகள் 25 - 30 சதவீதம் நீர் உள்ளதாக உத்திரமேரூர் ஒன்றிய நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.
இதேபோல ஒன்றிய கட்டுப்பாட்டிலான ஏரிகளில், 2 ஏரிகள் மட்டுமே அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 25 ஏரிகளில் 60 - 75 சதவீதமும், 40 ஏரிகள் 50 சதவீதமும், 62 ஏரிகளி 25 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளதாக உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா கூறினார்.
இதுகுறித்து, கடல்மங்கலம் விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஆகிய 2 ஏரிகளும் நிரம்பாததால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது.
சம்பா பட்ட சாகுபடிக்கான பணிகளை தற்போது துவங்கி உள்ள நிலையில், ஏரி பாசனத்தை கொண்டுள்ள விவசாய நிலங்களுக்கு சாகுபடிக்கான இறுதி கட்டம் வரை பாசனம் கிடைக்குமா என அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு பருவ மழை குறைவாக கிடைத்துள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

