/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
50 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான ஓட்டுச்சாவடிகள்...344: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
/
50 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான ஓட்டுச்சாவடிகள்...344: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
50 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான ஓட்டுச்சாவடிகள்...344: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
50 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான ஓட்டுச்சாவடிகள்...344: விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஏப் 11, 2024 11:02 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 79 ஓட்டுச்சாவடிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 265 ஓட்டுச்சாவடிகளிலும், 50 சதவீதத்திற்கும் குறைவாக, கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இந்த ஓட்டுச்சாவடி அமைந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க சமூக வலைதளம், பேரணி, மாணவர்கள், இசை, பாடல், உறுதிமொழி என, பல வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நகர்ப்புறங்களில்...
இருப்பினும், பல்வேறு தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைவாகவே பதிவாகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்திருப்பது, 2021 சட்டசபை தேர்தலில் கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி தெரியவந்தது.
இதையடுத்து, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், குறைவாக ஓட்டு சதவீதம் பதிவான ஓட்டுச்சாவடிகள் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அப்பகுதிகளில் விழிப்புணர்வு நடத்தவும், அதற்கான காரணத்தை அறியவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 79 ஓட்டுச்சாவடிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 265 ஓட்டுச்சாவடிகளிலும், 50 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு சதவீதம் பதிவாகியிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில், தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று, அங்குள்ள வாக்காளர்கள் கடந்த தேர்தலில் ஓட்டளிக்க தயக்கம் காட்டியது ஏன் எனவும், ஓட்டுச்சாவடி தொலைவு, சமூக பிரச்னை என, அதற்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி, செவிலிமேடு அரசு நடுநிலைப் பள்ளி.
கூடுதல் கவனம்
சுவாமி விவேகானந்தா பள்ளி, காஞ்சிபுரம் கால்நடை மருத்துவமனை அலுவலகம், பி.டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி ஆகிய ஐந்து இடங்களிலும் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், கடந்த முறை 50 சதவீதம் குறைவாக ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது.
கடந்த முறை ஓட்டு சதவீதம் குறைந்த ஓட்டுச்சாவடிகளில், இம்முறை ஓட்டு சதவீதம் உயர்த்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 50 சதவீதத்திற்கும் குறைவாக பதிவான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை பதிவு
இம்முறை ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி கூறப்படுகிறது. கடந்த முறை இரட்டை பதிவு அதிகம் இருந்தது. அதன் காரணமாகவும் ஓட்டு சதவீதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
இம்முறை, நவீன சாப்ட்வேர் மூலம் இரட்டை பதிவுகளை நீக்கியுள்ளோம். அதனால், ஓட்டு சதவீதம் அதிகமாக வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார் தொகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார் தொகுதியிலும், 50 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இப்பகுதிகளில் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

