/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி
/
வறண்டு கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி
ADDED : மார் 18, 2024 03:08 AM

உத்திரமேரூர் :  கோடைகாலத்தில் நீர்நிலைகள் வறண்டு விடும் நிலையில், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதில், கால்நடை பராமரிப்போர் சிரமப்படுகின்றனர்.
இத்தகைய நிலையை போக்க, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சிகள்தோறும் கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 73 ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தலா 20,000 ரூபாய் செலவில் கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இத்திட்டத்தை ஊராட்சி நிர்வாகம் நிர்வாகித்து வருகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த கால்நடை குடிநீர் தொட்டிகள் தண்ணீர் நிரப்பாமல் காட்சி பொருளாக காணப்படுகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஒரு சில பகுதிகள் தவிர்த்து, பெரும்பாலான ஊராட்சிகளில் கால்நடை குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகின்றன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.
எனவே, கால்நடைகளுக்காக கட்டிய குடிநீர் தொட்டிகளில் ஊராட்சிகள் தோறும் தண்ணீர் நிரப்பி பராமரிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை பராமரிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

