/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவகால நோய் தாக்கத்தால் கால்நடைகள் தவிப்பு! மருந்து வினியோகம் 3 மாதங்களாக நிறுத்தம்
/
பருவகால நோய் தாக்கத்தால் கால்நடைகள் தவிப்பு! மருந்து வினியோகம் 3 மாதங்களாக நிறுத்தம்
பருவகால நோய் தாக்கத்தால் கால்நடைகள் தவிப்பு! மருந்து வினியோகம் 3 மாதங்களாக நிறுத்தம்
பருவகால நோய் தாக்கத்தால் கால்நடைகள் தவிப்பு! மருந்து வினியோகம் 3 மாதங்களாக நிறுத்தம்
ADDED : ஆக 20, 2024 05:23 AM
காஞ்சிபுரம் : கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம், நோய் எதிர்ப்பு மருந்து, வெறிநாய் கடி தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள், மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. மருந்துகள் கையிருப்பு இல்லை எனவும், 'டெண்டர்' கோரி இம்மாதத்திற்குள் வழங்குவதாகவும் , கால்நடைத் துறை மருத்துவர்கள் சமாளித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 106 கால்நடை மருந்தகங்கள், 38 கிளை நிலையங்கள், மூன்று தலைமை மருத்துவமனை, ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் என, 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
இதில், 20வது கால்நடைகள் கணக்கெடுப்புபடி, 19,652 எருமை மாடுகள், 1.68 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் என மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
காய்ச்சல் மருந்து
மாடுகளுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி, சினை ஊசி, ஆண்டி பயோடிக் எனும் நோய் எதிர்ப்பு மருந்து, காய்ச்சல் மருந்து என, பல வித மருந்து தரப்படுகிறது. இதற்காக, கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு, வினியோகம் செய்யப்படுகின்றன.
இதில், குடற்புழு நீக்கம் மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி, நோய் எதிர்ப்பு மருந்து ஆகிய மருந்துகள், மூன்று மாதங்களாக வினியோகிக்கப்படவில்லை.
இதனால், அரசு கால்நடை மருத்துவமனை, கால்நடை கிளை நிலையம், கால்நடை மருந்தகங்கள் சிகிச்சைக்கு செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இன்றி மருந்துகளை வழங்க, சம்பந்தப்பட்ட கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கால்நடை பராமரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:
பருவநிலை மாறும் போது, ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது வழக்கம். கோடை காலம் முடிந்து, மழைக்காலம் துவங்க உள்ளது.
மாடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அங்கு, மருந்து தட்டுப்பாடு உள்ளது.
தனியாரிடம் மருந்து வாங்கி கொடுங்கள், நாங்கள் போட்டு விடுகிறோம் என, மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
இதனால், கால்நடை வளர்ப்பில் கூடுதல் செலவாகிறது. தட்டுப்பாடு இன்றி மருந்து கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வினியோகம் இல்லை
காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கால்நடை மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்படும், கால்நடை தடுப்பு மருந்துகள், மூன்று மாதங்களாக வினியோகம் இல்லை. இருப்பினும், சினை ஊசி, காய்ச்சல் தடுப்பூசி என, ஒரு சில மருந்துகள் மட்டுமே இருப்பில் உள்ளன.
குடற்புழு நீக்கம் மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி, நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் மருந்து வினியோகம் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.