/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது 'மாஸ்டர் பிளான்!'
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது 'மாஸ்டர் பிளான்!'
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது 'மாஸ்டர் பிளான்!'
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது 'மாஸ்டர் பிளான்!'
UPDATED : ஜன 19, 2025 05:30 AM
ADDED : ஜன 19, 2025 03:00 AM

பரந்துார் விமான நிலைய திட்டம் காரணமாக பாதிக்கப்படும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 1,005 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய, 245 ஏக்கரில் 'டவுன்ஷிப்' ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதற்கான 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்டம் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியுள்ளது.
சென்னை, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் மற்றும் சரக்கு கையாளுவது அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக பரந்துார் விமான நிலையத்தை, தமிழக அரசு, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க உள்ளது.
5,746 ஏக்கர்
இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. பரந்துாரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.
இதில், விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து, 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனால், பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 'டவுன்ஷிப்' உருவாக்கி தரப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கையை உருவாக்கி தரும் பணிக்கு ஆலோசகராக, 'நைட் பிராங்' நிறுவனத்தை, 'டிட்கோ' நியமித்துள்ளது.
தனியார் வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடக்கிறது. மொத்த நிலம் எடுக்க திட்டமிட்டுள்ள இடங்களில், நான்கு கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர்.
இத்திட்டத்தால் பாதிக்கப்படும், 1,005 குடும்பங்கள், சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி, குடிநீர் வழங்கல், மருத்துவமனை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, 'டவுன்ஷிப்' எனப்படும் புதிய நகரம் உருவாக்கி தரப்பட உள்ளது.
பரிசீலனை
இத்திட்டத்தை செயல்படுத்த, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கை தயாரித்து தரும் பணிக்கு ஆலோசகரை தேர்வு செய்ய டிட்கோ, 2024 செப்டம்பரில், 'டெண்டர்' கோரியது.
அதில் பங்கேற்ற நிறுவனங்களின் ஆவணங்களை பரிசீலனை செய்ததில், தற்போது 'நைட் பிராங்க்' நிறுவனம் தேர்வாகியுள்ளது. இந்நிறுவனத்திடம், மாஸ்டர் பிளான் தயாரித்து வழங்கும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், தன் பணிகளை துவக்கியுள்ளது.
இது, இரண்டு - மூன்று கருத்துரு அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து, அதற்கேற்ப 'டவுன்ஷிப்' உருவாக்கப்பட உள்ளது.
டவுன்ஷிப் உருவாக்கும் பணி முடிவடையும் வரை, நைட் பிராங்க் நிறுவனம், டிட்கோவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பரந்துார் விமான நிலைய திட்டம், நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய். முதல்கட்ட கட்டுமான பணியை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்கடுத்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு, 2 கோடி பயணியரையும், இறுதிகட்ட பணிகள் முடிவடையும் போது ஆண்டுக்கு, 10 கோடி பயணியரையும் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.