/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கமிஷனரை மாற்ற கோரி மேயர் கடிதம்... பனிப்போர்:டெண்டர் விவகாரத்தால் நிர்வாக சிக்கல்
/
கமிஷனரை மாற்ற கோரி மேயர் கடிதம்... பனிப்போர்:டெண்டர் விவகாரத்தால் நிர்வாக சிக்கல்
கமிஷனரை மாற்ற கோரி மேயர் கடிதம்... பனிப்போர்:டெண்டர் விவகாரத்தால் நிர்வாக சிக்கல்
கமிஷனரை மாற்ற கோரி மேயர் கடிதம்... பனிப்போர்:டெண்டர் விவகாரத்தால் நிர்வாக சிக்கல்
ADDED : ஜூன் 08, 2025 01:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் 'டெண்டர்' விவகாரத்தில், கமிஷனர் நவேந்திரனுக்கும், மேயர் மகாலட்சுமிக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. நீண்ட விடுப்பில் சென்றுள்ள கமிஷனர் நவேந்திரனை மாற்றக்கோரி, இயக்குநரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேயர் மகாலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் நகராட்சி, 2021ல் தரம் உயர்ந்து மாநகராட்சியானது. கமிஷனர் பதவியிலிருந்து பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் நியமனம் தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும், 60க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனராக கடந்த ஆண்டு பதவியில் சேர்ந்த நவேந்திரனுக்கும், மேயர் மகாலட்சுமிக்கும் இடையே, டெண்டர் சம்பந்தமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இதன் காரணமாகவே, கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கும் கமிஷனர் நவேந்திரன் பங்கேற்காதது பற்றி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர் நீண்ட நாட்கள் விடுப்பில் சென்றது தெரியவந்துள்ளது.
அவருக்கு பதிலாக, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திலிருந்து சசிகலா என்பவர், பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய காரணம்
மேயர் மகாலட்சுமிக்கும் - கமிஷனர் நவேந்திரனுக்கும் இடையிலான பனிப்போருக்கு டெண்டர் விவகாரம், முக்கிய காரணமாக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அலுவலக வட்டாரம் கூறியதாவது:
மேயர் - கமிஷனர் இடையிலான பனிப்போர், சில மாதங்களாக நீடிக்கிறது. இதன் பின்னணியில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் ஒருவருக்கு 'டெண்டர்' விடப்பட்டது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பேருந்து நிலையம் தொடர்பான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடுவது பற்றிய தீர்மானம், கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.
அப்போது, கவுன்சிலர் ஒருவரின் ஆட்சேபனையை தொடர்ந்து, மேயர் மகாலட்சுமி, டெண்டர் பணி தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்தார்.
அவர் தீர்மானத்தை ரத்து செய்தும், குறிப்பிட்ட அந்த ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகளால் பணி ஆணை வழங்கப்பட்டு, டெண்டருக்கான பணிகள் துவங்கி நடக்கின்றன.
தீர்மானம் ரத்து செய்த பிறகும், டெண்டர் பணிகளை சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதால், கமிஷனர் மீதான அதிருப்தி மேயருக்கு ஏற்பட்டது.
மேயர் கடிதம்
இது மட்டுமின்றி, மேலும் சில திட்டப் பணிகள் சம்பந்தமாக மேயர், கமிஷனர் இடையே ஒத்துழைப்பு இல்லை. இதனால், கமிஷனரை மாற்ற வேண்டி, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு, மேயர் கடிதம் எழுதி ஒப்படைத்துள்ளார்.
அதை தொடர்ந்தே கமிஷனர், கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவிர அவர், தொடர் விடுப்பிலும் உள்ளார். கமிஷனர் மட்டுமின்றி, மேலும் சில அதிகாரிகளும் 'டெண்டர்' விவகாரங்களில் பல குழப்பங்கள் செய்கின்றனர்.
மாநகராட்சி நிர்ணயம் செய்த மதிப்பீட்டு தொகையைவிட குறைவான தொகைக்கு பணிகள் செய்வதாக சிலர் டெண்டர் எடுக்கின்றனர்.
ஆனால், அந்த பணியுடன் வேறு சில பணிகளையும் வேறு விதங்களில் சேர்த்து, அதற்கான நிதி கொடுத்து, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர்.
குறிப்பாக, மாநகராட்சி சட்டப்பிரிவு 57/7ன்படி அவசர காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் வழங்கப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், சாதாரண காலங்களிலும் வழங்கப்படுகிறது.
சாலை, கட்டடம் போன்ற பணிகளை சாதாரண நாட்களில் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இதுபோன்ற பணிகளை, ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக 57/7 பிரிவின் கீழ் பல்வேறு ஒப்பந்த பணிகள் வழங்குகின்றனர்.
இதனால், எந்த பணிகளை அவசரமாக செய்ய வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.
இதுபோன்ற குளறுபடிகள் அதிகாரிகள் மத்தியில் நடப்பதால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மத்தியில் பல பிரச்னைகள் நடக்கின்றன.
விடுப்பில் சென்ற கமிஷனர் நவேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய கமிஷனர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
அத்துமீறும் ஒப்பந்ததாரர்கள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கும் பதில்கள், அதை வைத்து போடப்படும் வழக்குகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டியதாகிறது.
இதை வைத்து ஒப்பந்ததாரர்கள், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டி டெண்டர் பெறுகின்றனர்.
டெண்டர் தரவில்லை என்றால், யாரோ ஒருவர் வாயிலாக வழக்கு தொடர்கின்றனர். இதனால் பீதி அடைந்து அதிகாரிகள், அவர்களிடம் முரண்டு பிடிப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, சில ஒப்பந்ததாரர்கள் நினைக்கின்றனர். இதனால், வளர்ச்சி திட்டப் பணிகள் முழுமையாக முடியாமலும், முறையாகவும் அமைக்கப்படுவதில்லை.
- மாநகராட்சி கவுன்சிலர்கள்