/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் அருகே புதைந்து கிடக்கும் கனிம வளங்கள்...சுரண்டல்!:மதிப்பு தெரியாமல் கோட்டை விடும் அரசு அதிகாரிகள்
/
காஞ்சிபுரம் அருகே புதைந்து கிடக்கும் கனிம வளங்கள்...சுரண்டல்!:மதிப்பு தெரியாமல் கோட்டை விடும் அரசு அதிகாரிகள்
காஞ்சிபுரம் அருகே புதைந்து கிடக்கும் கனிம வளங்கள்...சுரண்டல்!:மதிப்பு தெரியாமல் கோட்டை விடும் அரசு அதிகாரிகள்
காஞ்சிபுரம் அருகே புதைந்து கிடக்கும் கனிம வளங்கள்...சுரண்டல்!:மதிப்பு தெரியாமல் கோட்டை விடும் அரசு அதிகாரிகள்
ADDED : பிப் 09, 2025 08:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில், மண்ணில் புதைந்து கிடக்கும் பல டன் எடை கொண்ட பாறை கற்களை, மர்ம நபர்கள் இரவோடு, இரவாக தோண்டி கடத்துவதாக கிராம வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மதிப்புமிக்க கனிமங்கள் சுரண்டப்படுவதை, அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய இரு தாலுகாவிலும், 50க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகின்றன. கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுவதில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக, ஏராளமான குற்றச்சாட்டுகள் நீடிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனிமவள சுரண்டல் ஒரு பக்கம் நடைபெறுவது தொடர்கிறது.
கிராமப்புறங்களில் கேட்பாரற்று கிடக்கும் மணல், பாறை போன்றவற்றை மர்ம நபர்கள் இரவோடு இரவாக கடத்துவது தொடர்கிறது. காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட கோளிவாக்கம் கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில், நமண்டி கூட்டு சாலை எதிரே உள்ள பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் பாறைகளை, லாரிகளில் மர்ம நபர்கள் ஏற்றி செல்வதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மண்ணில் புதைந்து கிடக்கும் இந்த பாறை கற்களை, இரவு நேரத்தில் தோண்டி சிறுக, சிறுக சேகரித்து வைத்து, லாரியில் ஏற்றி செல்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.
விலை மதிப்புமிக்க இந்த கனிமங்கள், மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, கோளிவாக்கம் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். பல டன் எடை கொண்ட பாறை கற்களை, ஏற்கனவே இரண்டு முறை லாரியில் ஏற்றி சென்றுவிட்டனர் என்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை அருகேயுள்ள வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்ட காஞ்சிவாக்கம் கிராமத்தில், 'கேய்லினைட்' என்ற கனிமப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. இந்த பொருட்களை, சில ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் அதிகளவில் திருடி சென்றனர்.
இந்த கனிமம் பீங்கான் பாத்திரங்கள், கழிப்பறை பொருட்கள், பதிகற்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுவதால் அதிகளவு கடத்தப்பட்டது. இதையடுத்து, கிராமத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மர்ம நபர்களின் நடமாட்டம் குறைந்தது.
உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள சிறுதாமூர் மலையில் உள்ள பாறை கற்கள், கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் அதிகளவு திருடப்பட்டது. இந்த பாறை கற்கள் சிலைகள் செய்ய பயன்படுத்துவதாக கூறப்பட்டது. கனிம திருட்டு சம்பந்தமாக அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். அதையடுத்து, கனிம திருட்டு சற்று குறைந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கத்தில் மண்ணில் புதைந்து கிடக்கும் ஏராளமான பாறை கற்களை மர்ம நபர்கள் திருடுவது தொடர்ந்துள்ளது. அரசுக்கு சொந்தமான கனிமங்கள் திருடுபோவதை, வருவாய் துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோளிவாக்கத்தில் பாறை கற்கள் திருடுபோவது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மோகன்குமார்,
தாசில்தார்,
காஞ்சிபுரம்.