/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் கத்திமுனையில் மொபைல்போன்கள் பறிப்பு
/
ஒரகடத்தில் கத்திமுனையில் மொபைல்போன்கள் பறிப்பு
ADDED : மார் 18, 2024 03:39 AM
ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் அடுத்த வைப்பூர் கிராமத்தில் பீஹார், அசாம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரவு நேரங்களில், அதிவேக திறன் கொண்ட பைக்கில் கத்திடன் வரும் மர்ம நபர்கள், சிப்காட் சாலையில் நடந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களை விரட்டி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்.
பெரும்பாலும், இவ்வாறு மொபைல் போன் பறிப்பில் ஈடுப்படும் இளைஞர்கள் கஞ்சா, மது போதையில் வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை கத்தியில் வெட்டி மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, வைப்பூர் கிராமம் மேட்டுத்தெருவில் உள்ள, ஒடிசா மாநில தொழிலாளர்கள் அறையில் புகுந்த மர்ம நபர்கள் இருவர், அறையின் கதவை உள் பக்கமாக தாளிட்டனர்.
பின், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வட மாநில தொழிலாளர்களின் கழுத்தில் வைத்து, மொபைல் போன், பணம் உள்ளிட்டவையை தரும் படி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து, 4 மொபைல் போன் மற்றும் 4,500 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பினர்.
ஒரகடம் சிப்காட் பகுதிகளில் அதிகரித்து வரும் இது போன்ற குற்ற செயல்களால், வட மாநில தொழிலாளர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
ஒரகடம் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

