/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிவுநீர் நிலையத்தில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தம் ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை: மாநகராட்சி கமிஷனர்
/
கழிவுநீர் நிலையத்தில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தம் ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை: மாநகராட்சி கமிஷனர்
கழிவுநீர் நிலையத்தில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தம் ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை: மாநகராட்சி கமிஷனர்
கழிவுநீர் நிலையத்தில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தம் ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை: மாநகராட்சி கமிஷனர்
ADDED : ஜூலை 03, 2025 10:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கழிவுநீர் நிலையத்தில் கண்காணிப்பு அமைப்பு அமைத்திருப்பதாகவும், ஏரியில் கழிவுநீர் கலக்கவில்லை எனவும், மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை பகுதியில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் நத்தப்பேட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 550 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு முழுதும் இந்த ஏரியில் தண்ணீர் இருப்பதால், இங்கு வளரும் மீன்களை பிடித்து மீனவர்கள் பலரும் விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
காத்திருப்பு
வேடந்தாங்கல் போல, கூழைக்கடா, வெள்ளை சிறிய நாரை உள்ளிட்ட பல பறவைகள் இங்கு ஆண்டு முழுதும் முகாமிடுவதால், பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுதொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில், நீர்வளத் துறைக்கு பறவைகள் சரணாலயம் அமைப்பது மற்றும் ஏரி சீரமைப்பு பற்றி பல்வேறு கேள்விகளை தீர்ப்பாயம் கடந்த ஆண்டுகளில் எழுப்பியிருந்தது.
ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுதும், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரியில் கலக்கிறது.
இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி பல ஆண்டுகள் ஆனதால், மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுநீர் முழுதும் ரசாயணங்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் நேரடியாக ஏரியில் கலப்பதாக மாநகராட்சி நிர்வாகம் மீது புகார் உள்ளது.
மேலும், ஏரியை சீரமைக்க தேவையான 28 கோடி ரூபாயும், அரசு ஒதுக்கீடு செய்யும் என நீர்வளத் துறை காத்திருக்கிறது.
ஏரியில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் மீது உள்ள குற்றச்சாட்டை மாநகராட்சி நிர்வாகம் மறுக்கிறது.
மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஒருங்கிணைந்த கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு அமைத்திருப்பதாக, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நத்தப்பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நேரடியாக கழிவுநீர் ஏரியில் கலப்பதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். விவசாயிகள் பலரும் இந்த புகாரை தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பாக நாங்கள் அமைத்துள்ளோம்.
வாய்ப்பில்லை
கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலப்பது இல்லை. கழிவுநீர் கலந்தால், நாங்கள் அமைத்துள்ள கண்காணிப்பு அமைப்பு தெளிவாக காண்பிக்கும். இந்த அமைப்பு பொருத்தி கண்காணிப்பதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நாங்கள் தெரிவித்துள்ளோம்.
அந்த அமைப்பில், 70 வகையான, கழிவுகள் ஏரியில் கலப்பதை தெளிவாக காண்பிக்கும். இந்த அமைப்பின் செயல்பாடு ஆன்லைனில் இணைக்கப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தோடு இணைத்துள்ளோம்.
ஏரியில் அசுத்தமான, கிருமிகளுடன்கூடிய கழிவுநீர் கலந்தால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரியவரும். அவர்களும் எங்களை கேள்வி எழுப்ப முடியும்.
அதனால், ஏரியில் கழிவுநீர் கலப்பதாக கூறுவது ஏற்க முடியாது. மஞ்சள் நீர் கால்வாயிலிருந்து வரும் தண்ணீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தோடு இணைக்க உள்ளோம். அதன் மூலம் வரும் கழிவுநீரும் சுத்திகரிக்கப்பட்டு விடும். இதனால், ஏரியில் எந்த கழிவுநீரும் கலக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.