/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்றுவழி சாலையில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
மூன்றுவழி சாலையில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 13, 2025 10:26 PM
வாலாஜாபாத்:பழையசீவரம் மலை பேருந்து நிறுத்த மூன்றுவழிச் சாலை பகுதியில், விபத்து அபாயம் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் உள்ளது. பழையசீவரம் பாலாற்றங்கரை மறுபுறம் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் தினசரி பழையசீவரம் சாலைக்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
பழையசீவரம் லட்சுமி நரசிம்ம கோவில் அருகே மலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இப்பேருந்து நிறுத்த பகுதியில் இருந்து பாலாற்று பாலம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை மற்றும் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கென மூன்று வழிச்சாலை பிரிகிறது.
இப்பிரிவு சாலையில், விதிமுறைகளின்றி தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக பாலாற்றங்கரையின் மறுபுறத்தில் இருந்து பழையசீவரம் சந்திப்பு சாலைக்கு வரும் வாகனங்கள், செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேகமாக வரும் வாகனத்தோடு விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, பழையசீவரம் மூன்றுவழிச் சாலை பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிக்னல் அல்லது பேரிகேட் போன்ற பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.