/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீதிபதி இடமாற்றத்தால் புது பஸ் நிலைய பணிக்கு... மீண்டும் சிக்கல் தனியார் அறக்கட்டளை விடாப்பிடியால் முட்டுக்கட்டை
/
நீதிபதி இடமாற்றத்தால் புது பஸ் நிலைய பணிக்கு... மீண்டும் சிக்கல் தனியார் அறக்கட்டளை விடாப்பிடியால் முட்டுக்கட்டை
நீதிபதி இடமாற்றத்தால் புது பஸ் நிலைய பணிக்கு... மீண்டும் சிக்கல் தனியார் அறக்கட்டளை விடாப்பிடியால் முட்டுக்கட்டை
நீதிபதி இடமாற்றத்தால் புது பஸ் நிலைய பணிக்கு... மீண்டும் சிக்கல் தனியார் அறக்கட்டளை விடாப்பிடியால் முட்டுக்கட்டை
ADDED : அக் 02, 2025 10:11 PM

காஞ்சிபுரம் :தனியார் அறக்கட்டளை தொடர்ந்த வழக்குகளால், பொன்னேரிக்கரையில் தேர்வான 19 ஏக்கர் நிலத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைவதில் இழுபறி நீடிக்கிறது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன்பாக, ஏழு ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், இப்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு, தினம் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன.
நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங் களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டபம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த 2017 முதல், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேருந்து நிலையத்துக்கு இடம் தேர்வு செய்த பிறகும், நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
19 ஏக்கர் இறுதியாக, பொன்னேரிக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளை பயன்பாட்டில் இருந்த இடத்தை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததில், அரசு நிலம் என்பதற்கான பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.
இதையடுத்து, கடந்தாண்டு இறுதியில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் நிலத்துக்கான உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், பேருந்து நிலையம் அமைக்க தேவையான 10 ஏக்கர் நிலத்தையும், அந்த இடத்திற்கான உள்நுழைவு அனுமதியையும், மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
தொடர்ந்து, பேருந்து நிலையம் அமையும் இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து, தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
இதற்கிடையே, தனியார் அறக்கட்டளை நிர்வாகம், 'பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், அவ்வாறு கையகப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' எனவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ரூ.35 கோடியில் டெண்டர் அதை தொடர்ந்து, அறக்கட்டளையின் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக்கோரி, வருவாய் துறை வழங்கிய நோட்டீசுக்கும், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.எனினும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், பொன்னேரிக்கரையில் 35 கோடி ரூபாய் மதிப்பில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான 'டெண்டர்' விட்டது.
நீதிமன்ற வழக்குகள் மத்தியில், பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவக்கியதால், அடுத்தகட்ட பணிகள் வேகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்ப்பு ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை இழுபறியாகவே இருக்கிறது.
கடந்த மே மாதம் நீதிமன்ற விடுமுறைக்கு பின், ஜூன், ஜூலை, செப்., என அடுத்தடுத்த மாதங்களில், நீதிபதி சுந்தர் முன்னிலையில் இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் விசாரணை நடக்கவில்லை என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், 19 ஏக்கர் நிலம் தேர்வாகியும் பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.
பொன்னேரிக்கரையில் உள்ள 19 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது. அதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. அங்கு தான் பேருந்து நிலையம் வரும்.
ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த முயலும்போது அதற்கும் அறக்கட்டளை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.
அந்த நிலத்துக்கு எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முயன்றால், அந்த இடமும் தங்களுக்கு சொந்தம் என, அறக்கட்டளை நிர்வாகம் தெரிவிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் முன், இந்த வழக்கு பட்டியலிடப்பட்டது. செப்., 28க்குள் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டிருக்கும்.
இந்நிலையில் அவர், மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், வேறு நீதிபதி இவ்வழக்கை விசாரிப்பார். அவ்வாறு விசாரிக்கும்போது, இடைக்கால தடை உத்தரவு நீக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.