/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக துணை சுகாதார நிலையங்கள்...51 இடங்களில் :காஞ்சியில் ஓரிரு மாதங்களில் துவங்கும்
/
புதிதாக துணை சுகாதார நிலையங்கள்...51 இடங்களில் :காஞ்சியில் ஓரிரு மாதங்களில் துவங்கும்
புதிதாக துணை சுகாதார நிலையங்கள்...51 இடங்களில் :காஞ்சியில் ஓரிரு மாதங்களில் துவங்கும்
புதிதாக துணை சுகாதார நிலையங்கள்...51 இடங்களில் :காஞ்சியில் ஓரிரு மாதங்களில் துவங்கும்
UPDATED : ஜூன் 20, 2025 03:05 AM
ADDED : ஜூன் 20, 2025 01:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப, கிராமப்புறங்களில், 51 துணை சுகாதார நிலையங்கள் புதிதாக அமைகின்றன. இந்த நிலையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பட துவங்கும் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப, புதிதாக 632 துணை சுகாதார நிலையங்களை அமைக்கப்படுவதாக, பொது சுகாதாரத் துறை சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 51 இடங்களில் புதிதாக துணை சுகாதார நிலையம் அமைக்க தேவை இருப்பதாக, துறை மேலிடத்திற்கு ஏற்கனவே அதிகாரிகள் கருத்துரு அனுப்பியிருந்தனர். அதன்படி, புதிதாக 51 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
மொத்தம் 5,000 பேர் இருந்தால் மக்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் 10,000க்கும் அதிக எண்ணிக்கையில் இருந்த துணை சுகாதார நிலையங்களை இப்போது பிரித்து, புதிதாக துணை சுகாதார நிலையங்கள் அமைகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 169 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுப்பாட்டில், இந்த துணை சுகாதார நிலையங்கள் இயங்கும்.
துணை சுகாதார நிலையங்களில், கிராம சுகாதார செவிலியர் என்பவர் மட்டும் பணியில் இருப்பார். இவர், திங்கட்கிழமைதோறும், அப்பகுதியில் இருந்து வரும் கர்ப்பிணியருக்கு மருந்துகள் வழங்குவதும், அவர்களுக்கான ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் கண்காணிப்பார்.
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி போன்ற நாட்களில், அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பணிகளிலும், மருத்துவ துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுவர். புதன்கிழமை கர்ப்பிணி, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவார்.
துணை சுகாதார நிலையங்களில், சளி, இருமல், காய்ச்சல், இரும்புசத்து மாத்திரைகள், தடுப்பூசி, முதலுதவி உபகரணங்கள் என, அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும். கிராமப்புறங்களில் கூடுதலாக 51 துணை சுகாதார நிலையங்கள் அமைவது, கிராமப்புற மக்களுக்கு இம்முறை பெரிதும் பலனிக்கும்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் புதிதாக 51 இடங்களில், துணை சுகாதார நிலையங்கள் தேவை என கண்டறிந்து, துறை மேலிடத்துக்கு தெரியபடுத்தினோம். இதையடுத்து, துணை சுகாதார நிலையங்கள், அருகில் உள்ள அரசு கட்டடங்களில் தற்காலிகமாக செயல்படும். ஒவ்வொரு நிலையத்திற்கும், இடவசதி, கட்டட வசதியை கலெக்டரிடம் கேட்டு பெறுவோம்.
உடனடியாக, இடவசதி, கட்டட வசதி பெற முடியாது. படிப்படியாக சொந்த கட்டடம் கிடைக்கும். துணை சுகாதார நிலையங்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கும். அங்குள்ள மருத்துவர், இந்த நிலையத்தையும் பார்த்துக்கொள்வார்.
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், 7 - 8 துணை சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. புதிதாக அமைக்கப்படும் துணை சுகாதார நிலையங்கள், அடுத்த ஓரிரு மாதங்களில் அமைக்கப்பட்டு, மொத்தமாக திறக்கப்படும்.
புதிதாக அமைக்கப்படும் துணை சுகாதார நிலையங்களுக்கு, ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்களை தற்காலிகமாக நியமிக்க உள்ளோம். செவிலியர்களை அடுத்து வரும் நாட்களில் துறை மேலிடம் நியமனம் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.