/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
காஞ்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
காஞ்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
காஞ்சியில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஜன 02, 2025 01:19 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2025ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் பிற்பகல் முதலே, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இரவில் அதிக வேகத்துடன், இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியும், பலர் இருசக்கர வாகனத்தில் விதிமீறி சென்றனர். காஞ்சிபுரம் நகர் முழுதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் பல்வேறு குடும்பத்தினர், சாலை நடுவே கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். காஞ்சிபுரத்தின் சில இடங்களில், சாலையிலேயே நடனமாடி இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடினர். அதேபோல், டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
சிறப்பு வழிபாடு
புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. டி.கே.நம்பி தெருவில் உள்ள திருக்கச்சியம்பதி விநாயகர் சந்தனகாப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆப்பிள், கொய்யா, செவ்வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவில் உள்ள ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், விருட்ச விநாயகர் ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வர பகவான், ராகு - கேது 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை தெற்கு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல வரதராஜ பெருமாள், குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி, ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சி.எஸ்.எஸ்., கிறிஸ்துநாதர் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வாலாஜாபாத்
பழையசீவரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுவாமி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், அப்பகுதி மலை மீது அமைந்துள்ள தையல் நாயகி அம்மை உடனாகிய வைத்தியநாத ஈஸ்வரர் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். வாலாஜாபாத் ஊத்துக்காடு தேவி எல்லையம்மன் கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராம கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தன.
கோவிந்தவாடி
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று காலை 5:00 மணி அளவில், மூலவர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. கண்ணன்தாங்கல் கிராமத்தில் உள்ள 108 சக்தி பீடத்தில், புஷ்ப அலங்காரம், தங்க கவசம், வெள்ளி கவசம், காய்கறி அலங்காரத்தில் சொர்ணகாமாட்சி எழுந்தருளினார்.
வல்லக்கோட்டை முருகன்
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில், வைர வேலுடன் காட்சியளித்தார். இதில், ஆயிரக்கணக்காக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- நமது நிருபர் குழு -