ADDED : மார் 19, 2024 09:32 PM
ஸ்ரீபெரும்புதுார்,:மாம்பாக்கம் சீனிவாசாபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் மனைவி சரண்யா, 31. 'மக்களை தேடி மருத்துவர்' திட்டத்தில் தன்னார்வல செவிலியராக பணியாற்றி வந்தார்.
நேற்று, தன் 2 வயது மகள் பிரதீபா மற்றும் ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவருடன், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் பிள்ளைச்சத்திரத்தில் இருந்து மதுரமங்கலம் அரசு மருத்துமனைக்கு சென்றார். பிள்ளைச்சத்திரம் -- ராமானுஜபுரம் சாலையில், மேம்பாலம் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், சரண்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது இரண்டு வயது மகள் மற்றும் உடன் வந்த கார்த்திக் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சந்தவேலுாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கத்தில் இருந்த சரண்யாவை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

